தமிழகத்தில் 4,55,568 டன் உரங்கள் முன் எப்போதும் இல்லாத வகையில் கையிருப்பு இருப்பதாக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக அரசு வேளாண்மைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் நிலையில் விவசாயிகளுக்கு தேவையான அனைத்து இடுப்பொருட்களும் உரிய காலத்தில் கிடைக்க வழிவகை செய்கிறது.

தற்போது தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கோடை மழை பரவலாக பெய்து வருவதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 103 அடிக்கும் மேல் இருக்கிறது. இதனால் காவிரி டெல்டா பகுதிகளில் குருவை நெல் சாகுபடி சென்ற வருடத்தைப் போலவே அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பிறகு ரசாயன உரங்களை தேவைக்கேற்ப முன்பே இருப்பு வைப்பதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு தேவையான உரங்கள் சீரான முறையில் விநியோகம் செய்யப்படுவதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார். மேலும் பயிர்களின் தேவைக்கேற்ப விவசாயிகள் உரங்களை வாங்கி பயன்படுத்துங்கள் என்றும் அமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார்.