தமிழ்நாட்டில் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மீண்டும் தகுதி தேர்வு நடத்தப்படாமல் நேரடியாக பணி நியமனம் செய்ய வேண்டும் என கடந்த 5 நாட்களாக சென்னையில் உள்ள டிபியை வளாகத்தில் ஆசிரியர்கள் போராட்டம் நடத்திவந்தனர் . இந்தப் போராட்டத்திற்கு தமிழகத்தின் அரசியல் கட்சி தலைவர்கள் பலர் ஆதரவு கொடுத்து ஆசிரியர்களை நேரில் சந்தித்து பேசினர். இதைத்தொடர்ந்து உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி ஆசிரியர்களை நேரில் சந்தித்து பேசினார். அப்போது ஆசிரியர்கள் டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மீண்டும் தகுதி தேர்வு நடத்தப்படும் என்ற அரசாணையை திரும்ப பெற வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
அதற்கு அமைச்சர் பொன்முடி இந்த கோரிக்கை விரைவில் நிறைவேற்றப்படும் என உறுதி கொடுத்தார். இதற்கு தற்போது பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை வரவேற்பு கொடுத்துள்ளார். அவர் அமைச்சர் பொன்முடி போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களை நேரில் சந்தித்து அவர்களின் கோரிக்கையை நிறைவேற்றி தருவதாக உறுதி கொடுத்தது மகிழ்ச்சி அளிக்கிறது என்று கூறியுள்ளார். மேலும் ஒரு வாரத்திற்குள் அவர்கள் கோரிக்கையை நிறைவேற்றித் தர வேண்டும் என கோரிக்கை விடுத்துக் கொள்வதாகவும் அண்ணாமலை கூறியுள்ளார்.