சத்தீஸ்கர் மாநிலம் கோர்பாவில் உள்ள அஹிரன் ஆற்றில் கிடந்த உடல் ஒரு குடும்பத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. 27 வயது ஹரியோம் வைஷ்ணவ் என்பவரின் உடல் என அவரது குடும்பத்தினர் அடையாளம் கண்டனர். உடலில் இருந்த ‘R’ என்ற பச்சை குத்தல் மற்றும் உயரம், உருவம் ஆகியவற்றை வைத்து அது தங்கள் மகனின் உடல் என உறுதிப்படுத்தினர்.

4 நாட்களுக்கு முன்பு தனது மாமனார் வீட்டிற்குச் சென்ற ஹரியோம், திடீரென மாயமானதாகவும், அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றும் குடும்பத்தினர் தெரிவித்தனர். இறுதிச் சடங்கிற்கு ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில், ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியது.

இறுதிச் சடங்கு ஏற்பாடுகளுக்கு மத்தியில், இரவு 12 மணியளவில் வீட்டு கதவு தட்டப்பட்டது. கதவைத் திறந்த குடும்பத்தினர், ஹரியோம் வைஷ்ணவ் உயிருடன் நிற்பதைக் கண்டு திகைத்தனர். முதலில் அவரை பேய் என நினைத்து அக்கம்பக்கத்தினர் பயந்து கூச்சலிட்டனர். ஆனால், உண்மை தெரிந்ததும் குடும்பத்தினர் மகிழ்ச்சியில் திளைத்தனர்.

உடனடியாக காவல்துறையினர் தகவல் அறிந்து, உடலை மருத்துவமனை குளிர்பதன பெட்டியில் வைத்தனர். இப்போது, உண்மையான இறந்தவர் யார் என்பதை கண்டறிய காவல்துறை மீண்டும் விசாரணையை தொடங்கியுள்ளது. இந்த சம்பவம் கோர்பாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.