கர்நாடகாவின் மண்டியாவைச் சேர்ந்த 25 வயது லதா, பெங்களூரு ராஜாஜிநகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஊழியராகப் பணியாற்றி வந்தார். அதே பகுதியைச் சேர்ந்த ரஞ்சித் என்ற எலக்ட்ரீஷியனுடன் அவருக்கு 5 ஆண்டுகளாக காதல் இருந்தது.

இருவரின் காதலுக்கு இரு தரப்பு பெற்றோர்களும் சம்மதம் தெரிவித்திருந்தனர். ஆனால், ரஞ்சித் திருமணத்தைத் தள்ளிப்போட்டு வந்ததுடன், அவரது நடவடிக்கைகளிலும் மாற்றம் ஏற்பட்டது. லதாவுடன் முன்பு போல் பேசுவதையும், பழகுவதையும் அவர் தவிர்த்ததால், இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

நேற்று முன்தினம் இரவு, லதாவுக்கும், ரஞ்சித்துக்கும் மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த லதா, ராஜாஜிநகர் காயத்திரி நகரில் தங்கியிருந்த வாடகை வீட்டில் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தகவலறிந்த சுப்பிரமணிய நகர் காவல்துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணை நடத்தினர். விசாரணையில், காதலர்களின் சண்டையால் விரக்தியடைந்த லதா தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

லதாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிய காவல்துறையினர், வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பும் ,சோகமும் நிலவியது.