டெல்லியில் புதிய கார் வாங்கிய மகிழ்ச்சியில் நடந்த ஒரு சடங்கு, எதிர்பாராத விபத்தாக மாறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 29 வயதான மாணி பவர், 27 லட்சம் மதிப்புள்ள மஹிந்திரா தார் காரை வாங்கி, ஷோரூமில் சடங்கு செய்ய முடிவெடுத்தார். காரின் சக்கரத்தின் கீழ் எலுமிச்சை பழத்தை வைத்து நசுக்கும் வழக்கமான சடங்கைச் செய்ய முயன்றபோது, தவறுதலாக ஆக்ஸிலரேட்டரை அழுத்திவிட்டார். இதனால், கார் கட்டுப்பாட்டை இழந்து, ஷோரூமின் கண்ணாடி சுவரை உடைத்து, முதல் மாடியில் இருந்து நடைபாதையில் தலைகீழாக விழுந்தது.

இந்த விபத்தில் மாணி பவருடன் ஷோரூம் ஊழியர் விகாஸும் காரில் இருந்தார். அதிர்ஷ்டவசமாக, கார் விழுந்தவுடன் ஏர்பேக்குகள் திறந்ததால், இருவரும் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர். உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, இருவரும் வீடு திரும்பினர். புதிய வாகனம் வாங்கும்போது இதுபோன்ற சடங்குகளை கவனமாகச் செய்ய வேண்டும் என்பதை இந்த சம்பவம் உணர்த்தியுள்ளது.