ஆந்திர மாநிலம் விஜயநகரத்தில் உள்ள பொறியியல் கல்லூரியில் நடந்த அதிர்ச்சி சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அங்கு எம்.டெக் முதலாம் ஆண்டு பயிலும் மாணவர் விநாயக புருசோத்தமன், தன்னை தேர்வு எழுத அனுமதிக்காததால் ஆத்திரமடைந்து, பேராசிரியர் கோபால்ராஜை கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளார். இவர் வழக்கமாக கல்லூரிக்கு வராததால், வருகைப்பதிவு குறைவு எனக் காரணம் காட்டி தேர்வு எழுத அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.

நேற்று முன்தினம் நடந்த தேர்வின்போது, விநாயக புருசோத்தமன் தேர்வு மையத்திற்கு வந்தார். ஆனால், பேராசிரியர் கோபால்ராஜ் அவரை தடுத்து, துறைத் தலைவரிடம் அனுமதி பெறுமாறு அறிவுறுத்தினார். இதை ஏற்காத மாணவர், தேர்வு மையத்திற்குள் நுழைய முயன்றார்.

இதனால் காவலாளியை அழைத்த பேராசிரியரை, ஆத்திரத்தில் மறைத்து வைத்திருந்த இரண்டு கத்திகளால் விநாயக புருசோத்தமன் குத்தியதில், பேராசிரியருக்கு பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. உடனடியாக மற்ற மாணவர்கள் அவரைப் பிடித்து கைகால்களைக் கட்டி, போலீசாரிடம் ஒப்படைத்தனர். காயமடைந்த பேராசிரியர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.