புதுடெல்லியில் இந்தியச் சிறைகளில் தான் அனுபவித்த மிகக் கொடூரமான தண்டனைகளை நினைத்தால் இப்போதும் தனக்குப் பயமாக இருப்பதாகப் பயங்கரவாதி மசூத் அசார் ஆடியோ ஒன்றில் பேசியிருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜம்மு காஷ்மீரிலுள்ள கோட் பல்வால் சிறையில் கடந்த 1990களில் அடைக்கப்பட்டிருந்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவனான மசூத் அசார், சக பயங்கரவாதிகளுடன் சேர்ந்து சிறையிலிருந்து தப்பிக்க ரகசியமாகச் சுரங்கம் தோண்ட முயன்றதாகவும், ஆனால், உடல் பருமன் காரணமாகத் தான் அந்தச் சுரங்கப் பாதையில் சிக்கிக்கொண்டதால் திட்டம் தோல்வியடைந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.
அப்போது நடந்த மோதலில் அவரது கூட்டாளி சுட்டுக் கொல்லப்பட்டார். 1999ஆம் ஆண்டு விமானக் கடத்தலுக்குப் பிறகு பயணிகள் மீட்கப்படுவதற்காக அவர் விடுவிக்கப்பட்டார். இந்நிலையில், பாகிஸ்தானில் நடந்த கூட்டம் ஒன்றில் பேசிய ஆடியோவில், “சுரங்கம் தோண்டும் விசயம் இந்திய அதிகாரிகளுக்குத் தெரிந்ததும், சங்கிலியால் கட்டி வைத்து அவர்கள் எங்களைக் கொடூரமான முறையில் தண்டித்தனர்.
அவர்கள் கொடுத்த அடியையும், வலியையும் நினைத்தால் இப்போதும் எனக்கு உடல் நடுங்குகிறது. இந்தியச் சிறை அதிகாரிகளைக் கண்டாலே எனக்குப் பயம்” என்று மசூத் அசார் ஒப்புக்கொண்டுள்ளார். இந்தியப் பாதுகாப்புப் படையினரின் கடுமையான நடவடிக்கை குறித்துப் பயங்கரவாதி நடுங்கிப் பேசியது தற்போது நாடு முழுவதும் பேசுபொருளாகியுள்ளது.
