உத்தரப் பிரதேச மாநிலம் ஜான்பூரில், குழந்தையைக் கடத்த முயன்றதாகக் கூறி இரண்டு சாமியார்களை ஒரு கும்பல் மிகக் கொடூரமாகத் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் ஜான்பூர் நகரக் காவல் நிலையப் பகுதியிலுள்ள ஃபைஸபாக் என்ற இடத்தில் சனிக்கிழமை அன்று நடந்துள்ளது.

 

சாமியார்களைச் சூழ்ந்துகொண்ட மக்கள், அவர்களைத் தடிகளாலும், இடுப்புப் பட்டைகளாலும் ஓட ஓட விரட்டித் தாக்கியுள்ளனர். மேலும், தாக்குதலின்போது சாமியார்களிடம் ஹனுமான் சாலிசா மற்றும் காயத்ரி மந்திரத்தைச் சொல்லச் சொல்லியும் கேட்டுள்ளனர்.

இந்தத் தாக்குதலின் காணொளிக் காட்சிகள் சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவியதை அடுத்து, ஜான்பூர் காவல்துறை உடனடியாக வழக்குப் பதிவு செய்து, தாக்குதலில் ஈடுபட்ட நான்கு பேரை இதுவரை கைது செய்துள்ளது. இந்தச் சம்பவம் குறித்து காவல்துறையினர் மேலும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.