தலைநகர் டெல்லியில் மாத வாடகை செலுத்த முடியாமல் வீட்டை விட்டு வெளியேற்றப்படும் நிலை ஏற்பட்டதால், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய் மற்றும் இரண்டு மகன்கள் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சோகச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியின் கல்காஜி பகுதியில் வசித்து வந்த 52 வயது அனுராதா கபூர், அவரது 32 வயது மகன் ஆஷிஷ் கபூர் மற்றும் 27 வயது மகன் சைதன்யா கபூர் ஆகியோரின் உடல்கள் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டன.

கடந்த ஆண்டு அனுராதாவின் கணவர் இறந்த பிறகு, மகன்களுக்கு வேலை இல்லாததாலும், கணவர் விட்டுச் சென்ற பெரும் கடன் சுமையினாலும் அந்தக் குடும்பம் கடுமையான நிதி நெருக்கடியில் இருந்துள்ளது. கடந்த 2023ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் மாத வாடகை 40000 ரூபாயைச் செலுத்த முடியாமல் இருந்ததால், வீட்டு உரிமையாளர் வீட்டை காலி செய்யுமாறு கோரி நீதிமன்றத்தை அணுகியுள்ளார்.

இது தொடர்பாக வீட்டு உரிமையாளருடன் அடிக்கடி வாக்குவாதங்கள் ஏற்பட்டதால், கடுமையான மன அழுத்தத்திற்கு ஆளான மகன்கள் சென்ற மாதமே தற்கொலைக்கு முயன்றுள்ளனர். வீட்டு உரிமையாளரின் புகாரின் பேரில், நீதிமன்ற உத்தரவுப்படி வீட்டை காலி செய்ய காவல்துறை மற்றும் சட்ட அலுவலர்கள் கடந்த வெள்ளிக்கிழமை அங்கு வந்தபோது, வீடு உள்ளே பூட்டப்பட்டிருந்தது.

போலிச் சாவியைப் பயன்படுத்தி கதவைத் திறந்து பார்த்தபோது, தாயும் அவரது இரண்டு மகன்களும் மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாகக் காணப்பட்டனர். பண நெருக்கடி காரணமாகத் தற்கொலை செய்து கொண்டதாக எழுதப்பட்டிருந்த கடிதம் ஒன்றும் சடலங்களுக்கு அருகில் கண்டெடுக்கப்பட்டதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.

இறந்தவர்களின் உறவினர்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு, உடல்கள் உடற்கூறு ஆய்வுக்காக எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. குடும்ப வறுமை காரணமாக ஏற்பட்ட இந்தச் சோகமான முடிவு அனைவரையும் உலுக்கியுள்ளது.