இலங்கையில் கடந்த மாதம் முழுவதும் பெய்த கனமழை, வெள்ளம் மற்றும் டிட்வா புயல் (Tidwa Cyclone) காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சூழலில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் நோக்குடன் பாகிஸ்தான் அனுப்பிய நிவாரணப் பொருட்களில் (Relief Materials) பல, காலாவதியானவையாக இருந்ததைக் கண்டு இலங்கை அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

பாகிஸ்தான் விமானம் மூலம் அனுப்பிய மருந்துப் பொருட்கள், உணவுப் பொட்டலங்கள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களில், 2024 ஆம் ஆண்டிலேயே காலாவதியானப் பல பொருட்கள் இருந்துள்ளன. அவசரமாக அனுப்பப்பட்ட பல பொருட்கள் பயன்படுத்த முடியாத நிலையில் இருந்துள்ளன.

இதனைக் கவனத்தில் கொண்ட இலங்கையின் பேரிடர் நிர்வாகம் மற்றும் வெளிவிவகாரத் துறையினர், பாகிஸ்தானிடம் தூதரக ரீதியிலும் (Diplomatic Level) பிற வழிகளிலும் தங்கள் தீவிர அதிருப்தியைத் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையில், இந்தியா சார்பில் ‘ஆபரேஷன் சாகர்பந்து’ (Operation Sagar Bandhu) நடவடிக்கை மூலம், இந்தியக் கடற்படை மற்றும் விமானப் படைக் கப்பல்கள் மற்றும் விமானங்கள் மூலம் மொத்தம் 53 டன்கள் நிவாரணப் பொருட்கள் உடனடியாக இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டு, அங்குள்ள நிலையைச் சமாளிக்க உதவியுள்ளது.