பாகிஸ்தானில் மாற்றியமைக்கப்பட்ட ஒரு சொகுசு பேருந்தின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வழக்கமாக சொகுசுப் பேருந்துகளில் அமர்வதற்கும் படுப்பதற்கும் என இரண்டு பிரிவுகள் மட்டுமே இருக்கும். ஆனால், இந்த புதுமையான பேருந்தில் கூடுதலாக ‘பிசினஸ் கிளாஸ்’ என்ற மூன்றாவது பிரிவும் சேர்க்கப்பட்டுள்ளது.

இந்தக் கூடுதல் பிரிவு எங்கே இருக்கிறது என்று பார்த்தால், அது பொதுவாகப் பயணிகளின் சமான்களை வைக்கும் இடத்தில் உருவாக்கப்பட்டுள்ளதுதான் இதன் தனித்தன்மை.

 

@EpicClipVault என்ற எக்ஸ் (X) கணக்கில் பகிரப்பட்ட இந்த வீடியோவில், சமான்கள் வைக்கும் பகுதியை ‘பிசினஸ் கிளாஸ்’ ஆக்குவதற்காக மாற்றி அமைத்துள்ளனர். மேலும், இந்த ‘பிசினஸ் கிளாஸ்’ பகுதியின் வெளிப்புறத்தில் ‘லிமோசின்’ கார் போல வண்ணம் பூசப்பட்டு, ‘லிமோசின்’ என்ற வார்த்தையும் எழுதப்பட்டுள்ளது.

“>

மாற்றி அமைக்கப்பட்ட இந்தக் கீழ்ப்பகுதியில் ஒவ்வொரு தனி பிசினஸ் கிளாஸ் பிரிவிற்கும் தனித்தனிக் கதவுகள் இருப்பது ஒரு லிமோசின் கார் பேருந்துடன் இணைக்கப்பட்டுள்ளதைப் போன்ற தோற்றத்தை அளிக்கிறது.

உள்ளே இரண்டு பேர் வசதியாகப் படுக்கும் அளவுக்கு இடவசதி உள்ளது. இந்த வீடியோவுக்குப் பல சுவாரஸ்யமான எதிர்வினைகள் கிடைத்துள்ளன. சமான்கள் வைக்கும் இடம் பிசினஸ் கிளாஸாக மாறினால், பயணிகளின் பைகள் எங்கே போகும் என்று ஒரு பயனர் கேட்டுள்ளார்.

மேலும், பேருந்தின் சஸ்பென்ஷன் பகுதிக்கு அருகில் பயணம் செய்வது சௌகரியமாக இருக்காது என்று சிலர் கருத்து தெரிவித்துள்ளனர். இதுபோன்ற புதுமையான மாற்றங்கள் பயணிகளை ஈர்க்கும் என்றும் சிலர் குறிப்பிட்டுள்ளனர்.