சீனாவில் குழந்தைப் பிறப்பு விகிதம் அபாயகரமாகக் குறைந்து, அது நாட்டின் பொருளாதார வளர்ச்சியைப் பாதிக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள நிலையில், அதைக் கையாள புதிய மதிப்புக் கூட்டு வரி நடவடிக்கையை அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. மூன்று தசாப்தங்களுக்குப் பிறகு, முதன்முறையாக கருத்தடை மருந்துகள் மற்றும் சாதனங்களுக்கு, இதில் ஆணுறைகளும் அடக்கம், 13% வரி விதிக்கப்பட்டுள்ளது.

1993-ம் ஆண்டில் கடுமையாகச் செயல்படுத்தப்பட்ட ‘ஒரே குழந்தை’ கொள்கையின் போது பிறப்புக் கட்டுப்பாட்டை ஊக்குவிக்க இந்தச் சாதனங்களுக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டிருந்தது. ஆனால், தற்போது நிலைமை தலைகீழாக மாறியுள்ளது. வேகமாக முதுமையடைந்து வரும் சீனா, மக்களை அதிக குழந்தைகள் பெற்றுக்கொள்ள ஊக்குவிக்க, இந்த வரி விலக்கை நீக்கியுள்ளது.

மாறாக, ஜனவரி மாதம் முதல் அமலுக்கு வரும் இந்தச் சட்டத்திருத்தத்தில், குழந்தைகள் காப்பகங்கள், மழலையர் பள்ளிகள், முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளி சேவைகள் மற்றும் திருமணச் சடங்குகள் போன்றவற்றுக்கு புதிய வரி விலக்குகள் அளிக்கப்பட்டு, பெற்றோருக்கு சலுகைகளும் வழங்கப்பட்டுள்ளன. 2024-ஆம் ஆண்டில் சீனாவில் வெறும் 9.54 மில்லியன் குழந்தைகள் மட்டுமே பிறந்த நிலையில், இது ஒரு தசாப்தத்திற்கு முன்பு இருந்ததில் பாதியளவு தான்.

மக்கள் தொகையை உயர்த்த அரசு பல்வேறு நிதி உதவிகள் மற்றும் பேறுகால விடுப்புச் சலுகைகளை வழங்கினாலும், குழந்தைகளை வளர்ப்பதற்கான அதிக செலவு (சுமார் 5,38,000) மற்றும் பொருளாதார மந்தநிலையால் இளம் தம்பதியினர் குழந்தை பெறுவதைத் தவிர்க்கின்றனர். இதனால், கருத்தடைகளுக்கு வரி விதிப்பது, மக்களை குழந்தைப் பிறப்புக்கு இட்டுச் செல்லுமா என்பதில் சந்தேகங்கள் எழுந்துள்ளன. இது பெரும்பாலும் சமூகச் சூழலை மாற்றியமைப்பதற்கான அடையாள நடவடிக்கையே அன்றி, பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது என்று மக்கள் தொகையியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

அதே சமயம், உலகளவில் குறைந்து வரும் எச்.ஐ.வி பாதிப்பு, சீனாவில் அதிகரித்து வரும் நிலையில், ஆணுறையின் விலை உயர்வு காரணமாக மக்கள் அவற்றைப் பயன்படுத்துவதைக் குறைத்து, பாலியல் பரவும் நோய்கள் அதிகரிக்கக்கூடும் என்ற கவலையும் சமூக ஊடகங்களில் எழுந்துள்ளது. விலை உயர்ந்தால், “ஆணுறையின் விலையைக் கூடச் செலுத்த முடியாத ஒருவர், ஒரு குழந்தையை எப்படி வளர்க்க முடியும்?” எனச் சிலர் கேள்வி எழுப்பியுள்ளனர்.