உண்மைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் சீனா ‘உளவு பார்க்கும் ரோபோட்’ ஒன்றை நிறுத்தியிருப்பதாக சமூக வலைத்தளங்களில் அதிவேகமாகப் பரவும் காணொளியால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஒரு மலைப்பகுதியில், மனித உருவத்தை ஒத்த ஒரு பொருள் அமைதியாக நிற்பது போல் அந்தக் காணொளியில் பதிவாகியுள்ளது. இது, சீன ராணுவத்தின் எல்லைப் பாதுகாப்புக்கான புதிய ரோபோட் கண்காணிப்பு முயற்சி என இணையவாசிகள் மத்தியில் விவாதம் கிளம்பியுள்ளது.

எனினும், இந்தக் காணொளியின் உண்மைத்தன்மையை இந்திய, சீன ராணுவ அதிகாரிகள் உறுதிப்படுத்தவில்லை. அந்த உருவம், வெறும் ஒளியியல் பிழையாகவோ அல்லது கவனத்தை ஈர்க்க வைக்கப்பட்டிருக்கும் பொம்மை போன்ற அமைப்பாகவோ இருக்கலாம் எனவும் சிலர் சுட்டிக்காட்டியுள்ளனர். ஆயினும், இந்தச் சம்பவம் சீன அரசாங்கம் அதிநவீன செயற்கை நுண்ணறிவு மற்றும் மனித உருவ ரோபோட்களில் தீவிரமாகக் கவனம் செலுத்தி வருவதைச் சர்வதேச அளவில் வெளிப்படுத்தியுள்ளது.

இந்திய எல்லையில் ரோபோட் பற்றிய செய்தி வெளியாகியுள்ள நிலையில், வியட்நாம் எல்லைச் சோதனைச் சாவடியில் கூட்டத்தைக் கட்டுப்படுத்த மனித உருவ ரோபோட்களைப் பயன்படுத்த சீனா திட்டமிட்டுள்ளது. இதற்குத் தேவையான ‘வாக்கர் எஸ்2’ என்ற ரோபோக்களை ஷென்சென் நகரைச் சேர்ந்த யூபிடெக் ரோபோடிக்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இது, உலகிலேயே முதன்முறையாக மனித உதவி இல்லாமல் தானாகவே பேட்டரியை மாற்றிக்கொள்ளும் தொழில் தரத்திலான ரோபோட் ஆகும்.

இதனால், ரோபோட்களால் எந்தத் தடையுமின்றி நீண்ட நேரம் இயங்க முடியும். சுங்கச் சாவடி, தளவாடங்கள் மற்றும் தொடர்ந்து கண்காணிக்க வேண்டிய எல்லைப் பணிகளுக்கு இது அத்தியாவசியமான அம்சம். இந்த ரோபோட் குழுக்கள் டிசம்பர் 2025 முதல் சோதனைக்கு உட்படுத்தப்பட உள்ளன. எல்லையோர நிர்வாகம் மட்டுமல்லாமல், தொழில்துறை பகுதிகளிலும், குறிப்பாக எஃகு, தாமிரம் போன்ற தொழிற்சாலைகளில் ஆய்வுப் பணிகளுக்கும் இந்த பல்துறை ரோபோட்களை சீனா பயன்படுத்தவுள்ளது, இது அதன் தேசியத் திட்டத்தின் ஒரு பகுதியாகக் கருதப்படுகிறது.