நொய்டாவில் கடந்த வாரம் நடந்த விபத்து, சாதாரண விபத்தல்ல; அது அதிகாரிகளின் அலட்சியத்தால் நடந்த ஒரு படுகொலை என்பது தற்போது ஆதாரங்களுடன் வெட்டவெளிச்சமாகியுள்ளது.

27 வயது யுவராஜ் மேத்தா, பனிமூட்டம் காரணமாகத் தனது காரை ஓட்டிச் சென்றபோது, சாலையோரம் பாதுகாப்பற்ற நிலையில் தோண்டப்பட்டிருந்த ஆழமான பள்ளத்தில் விழுந்து உயிரிழந்தார்.

இந்த வழக்கில் முக்கியச் சாட்சியான டெலிவரி ஊழியர் மொனிந்தர் சிங், போலீஸார் தன்னை மிரட்டிப் பொய்யான வாக்குமூலம் கொடுக்கச் சொன்னதாகப் புகார் கூறியுள்ளார்.

“போலீஸார் என்னை ஒரு பூங்காவிற்கு அழைத்துச் சென்று 4 மணி நேரம் உட்கார வைத்தனர். அவர்களே ஒரு ஸ்கிரிப்ட் எழுதி கொடுத்து, ‘போலீஸார் தண்ணீருக்குள் இறங்கிப் போராடினார்கள்’ என்று வீடியோவில் சொல்லச் சொல்லி கட்டாயப்படுத்தினர்” என அவர் உண்மையை உடைத்துள்ளார்.

மேலும், கூகுள் எர்த் சேட்டிலைட் புகைப்படங்களின்படி, அந்த ஆபத்தான பள்ளம் கடந்த 3 ஆண்டுகளாக எவ்வித பாதுகாப்பு வேலிகளும் இன்றித் தண்ணீருடன் கிடப்பதும், இது தொடர்பாகப் புகார் அளித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதும் உறுதியாகியுள்ளது.

தனது மகன் காரின் மேற்கூரையில் ஏறி நின்று “காப்பாத்துங்கப்பா” எனக் கதறியும், குளிரைக் காரணம் காட்டி போலீஸார் உள்ளே இறங்க மறுத்ததை யுவராஜின் தந்தை நேரில் பார்த்துத் துடித்தது பலரையும் கலங்க வைத்துள்ளது.