அ.தி.மு.க. ஆட்சியில் 10 மண்டலங்களில் தூய்மை பணிகளை தனியாருக்கு டெண்டர் மூலமாக ஒப்படைத்தது தவறு தான் என்று வி.கே. சசிகலா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். தனது 71வது பிறந்த நாளை முன்னிட்டு இன்று சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள இல்லத்தில் தொண்டர்களுக்கு இனிப்புகள் வழங்கிய பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், “யார் செய்தாலும் தவறு தவறே தான்” எனக் குறிப்பிட்டார். தூய்மை பணியாளர்களுக்கான உரிமை மற்றும் வேலை பாதுகாப்பு தொடர்பாக தி.மு.க அரசு தனது வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என்றும் சாடினார்.
மேலும், 2016-ஆம் ஆண்டு அ.தி.மு.க ஆட்சிக்கு வந்ததும், ஜெயலலிதா தூய்மை பணியாளர்கள் விவகாரத்தில் தீர்வு காண திட்டமிட்டு இருந்தார் என்றும், அதைத் தானும் நன்கு அறிந்திருப்பதாக சசிகலா தெரிவித்தார். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு பல மாற்றங்கள் நடந்துவிட்டதாகவும், அ.தி.மு.க தற்போது பலவீனமாக இருப்பதை மாற்றுவது தான் தனது குறிக்கோள் என்றும் வலியுறுத்தினார். இதுபோன்ற முக்கியமான காரியங்களை புதியவர்கள் செய்ய முடியாது, இதைப் பற்றி அனுபவமுள்ளவர்களால் மட்டுமே தீர்வு காண முடியும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
“பத்திரிகையாளராக இருப்பதற்கும் தகுதியும், அனுபவமும் வேண்டும். சூழ்நிலைகளை புரிந்து கொண்டு செயல்பட வேண்டும்” எனக் கூறிய சசிகலா, மைக் எடுத்துக் கொண்டே யாரும் கேள்வி கேட்பது என்பது சரியான பத்திரிகை பணி அல்ல என்றும், பத்திரிகையாளர்கள் தங்களது கற்றலையும், நிலைத்த விழுப்புணர்வையும் வளர்க்க வேண்டும் என அறிவுரை வழங்கினார்.
