சீனாவின் ஹுனான் மாகாணத்தில் உள்ள ஷினியுஜாய் தேசிய புவியியல் பூங்காவில் செங்குத்தான மலைப்பாறையில் தரையிலிருந்து சுமார் 393 அடி உயரத்தில் தொங்கிக்கொண்டிருக்கும் ஒரு விசித்திரமான மளிகைக் கடை சமூக வலைத்தளங்களில் உலகளவில் விவாதப் பொருளாக மாறியுள்ளது. வெறும் இரண்டு சதுர மீட்டர் பரப்பளவில் மரப்பலகைகளால் கட்டப்பட்டுள்ள இந்தச் சிறிய கடை, “உலகின் மிகவும் ஆபத்தான கடை” என்று அழைக்கப்படுகிறது.

இந்த வினோதமான கடைக்குச் சென்று பொருட்கள் வாங்குவது சாதாரண ஆட்களுக்குச் சாத்தியமில்லாத ஒன்று; ஏனென்றால், அங்கு செல்ல வேண்டுமென்றால் தொழில்முறை மலையேற்ற உபகரணங்கள் மற்றும் இரும்பு கயிறுகளின் உதவியுடன் அந்தச் செங்குத்தான பாறையில் சுமார் ஒன்றரை மணி நேரம் உயிரைப் பணயம் வைத்து ஏற வேண்டும்.

 

 

View this post on Instagram

 

A post shared by Advancible (@advancible)

இந்தக் கடையை விட, அங்கு வேலை செய்யும் ஊழியர்களின் துணிச்சல்தான் பார்ப்பவர்களைப் பிரமிக்க வைக்கிறது. காற்றில் தொங்கும் இந்த உறைவிடக் கடையில் கழிப்பறை (Toilet) வசதி எதுவும் இல்லாததால், வேலை நேரத்தில் அடிக்கடி கீழே இறங்கி ஏறும் சிரமத்தைத் தவிர்க்க அங்குள்ள ஊழியர்கள் தண்ணீர் குடிப்பதைக் கூடத் தவிர்த்து விடுகின்றனர். தங்களது தாகத்தை அடக்கிக்கொண்டு, மலை ஏறும் சுற்றுலாப் பயணிகளின் தாகத்தைத் தீர்க்கும் இந்த ஊழியர்கள், தினமும் காலையில் கனமான பொருட்களைத் தங்களது முதுகில் சுமந்து கொண்டு இந்த மலைப்பாறையில் ஏறுகின்றனர்.

இவ்வளவு கடினமான சூழலிலும், இக்கடையில் விற்கப்படும் பொருட்களின் விலை மிகவும் சாதாரணமாகவே உள்ளது; ஒரு தண்ணீர் பாட்டிலின் விலை வெறும் 2 RMB (இந்திய மதிப்பில் சுமார் 28 ரூபாய்) மட்டுமே. கடையில் ஊழியர்கள் இல்லாத நேரத்தில், அங்குள்ள க்யூஆர் (QR) கோடை ஸ்கேன் செய்து ஆன்லைன் மூலமாகப் பணம் செலுத்திவிட்டுப் பொருட்களை எடுத்துச் செல்லும் அதிநவீன டிஜிட்டல் வசதியும் இந்த 393 அடி உயரக் கடையில் செய்யப்பட்டுள்ளது.