தூய்மை பணியாளர்களை நிரந்தர வேலைக்கு நியமிப்பது சமூக நீதியல்ல, அவர்களை அந்தத் தொழிலில் இருந்து மீட்டெடுப்பதே சமூக நீதி என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறிய கருத்து, அரசியல் வட்டாரங்களில் கடும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
“நீங்கள் காலம் முழுக்க குப்பை அள்ளுங்கள் என கூறுவது ஏற்கத்தக்கதல்ல” எனவும், “அவர்கள் அந்த வேலைகளில் இருந்து விடுபட்டு உயர்ந்த நிலைக்குச் செல்ல வேண்டும் என்பதே எங்களின் நோக்கம்” எனவும் அவர் கூறியிருந்தார்.
இந்த கருத்திற்கு, திருமாவளவனுடன் கூட்டணி வைத்திருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் சண்முகம் மாறுபட்ட கருத்தை தெரிவித்துள்ளார். “தமிழகத்தில் உள்ள சட்டப்படி, ஒரு பணியாளர் 240 நாட்கள் பணியில் இருந்தால், அவரை நிரந்தரமாக்க வேண்டும் என்பது விதிமுறை.
அந்த சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதே தொழிற்சங்கங்களின் கோரிக்கையாகும்,” என அவர் தெரிவித்துள்ளார். அதுபோல் ஒப்பந்தத்தில் பணியாற்றும் பல துறையினருக்கு பணி நிரந்தரம் கிடைக்காத நிலை உள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும், ஒரு துப்புரவு பணியாளர் குடும்பத்தில் பிறந்த பெண், தனது பெற்றோர் நிரந்தர பணியாளர்களாக இருந்ததன் பலனாக, பி.எச்.டி. பட்டம் வரை கல்வி கற்றுப் பெற்று, தற்போது ஒரு கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றுகிறார் என சண்முகம் எடுத்துக்காட்டினார்.
“நிரந்தர வேலை என்பது பணியின் பரம்பரையை நிலைநாட்டுவது அல்ல. அந்தப் பணி மூலம் கிடைக்கும் பாதுகாப்பும் வருமானமும், அடுத்த தலைமுறையை உயர்வுக்கு அழைத்துச் செல்லும் திறன் கொண்டது. எனவே, திருமாவளவன் மற்றும் அதியமான் போன்றவர்கள் சொல்வது ஏற்கத்தக்கது அல்ல” என அவர் சுயமாகக் கூறினார்.
