இந்தியாவில் இயங்கும் “மேரியன் பயோடெக்” எனும் நிறுவனத்தின் தயாரிப்பான டோக் 1 மேக்ஸ் என்ற இருமல் மருந்தை எடுத்துக் கொண்டதால் உஸ்பெகிஸ்தானில் 18 குழந்தைகள் இறந்ததாக அந்நாட்டு சுகாதார அமைச்சகமானது குற்றம் சாட்டியது. இதையடுத்து சம்பந்தப்பட்ட இருமல் மருந்து உற்பத்தி நிறுத்தப்பட்டதோடு  மத்திய மருந்துகள் தர கட்டுப்பாட்டு அமைப்பு (சிடிஎஸ்சிஓ) அதிகாரிகள் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டனர். அதன்பின் மருந்தில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் எத்திலீன் கிளைக்கால் ரசாயனம் இருப்பது கண்டறியப்பட்டது.

இந்த நிலையில் மேரியன் பயோடெக் நிறுவனத்தின் ஊழியர்கள் 3 பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு உள்ளனர். அதோடு இந்நிறுவனத்தின் இயக்குநர்களான ஜெயா ஜெயின், சச்சினி ஜெயின் உள்ளிட்ட இருவர் மீதும் 5 பிரிவுகளின் கீழ் காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. நொய்டாவில் செயல்பட்டு வரும் இந்நிறுவனத்தின் டோக்-1 மேக்ஸ் எனும் இருமல் மருந்தின் மாதிரிகள் சென்ற டிசம்பர் மற்றும் ஜனவரி 12ம் தேதி பரிசோதனைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது. முன்னதாக ஆப்பிரிக்க நாடான காம்பியாவில் இந்திய தயாரிப்பு இருமல் மருந்தால் 70 குழந்தைகள் உயிரிழந்ததாக கடந்த அக்டோபரில் சா்ச்சை ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.