நாகப்பட்டினத்தில் தனியார் அறுவடை எந்திரங்களுக்கான வாடகையானது கூடுதலாக வசூலிக்கப்படுவதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.  எனவே அறுவடை இயந்திரங்களுக்கான வாடகையை முறைபடுத்த வேண்டும் என்று விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தியுள்ளனர்.  இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது ,வேளாண் சார்ந்த அலுவலர்கள், விவசாயிகள் சங்க பிரதிநிதிகள், தனியார் அறுவடை எந்திரங்களின் உரிமையாளர்கள் மற்றும் முகவர்கள் ஒருங்கிணைந்த முத்தரப்பு கூட்டமானது நடத்தி விவாதிக்கப்பட்டது.

அதன்படி பெல்ட் டைப் அறுவடை எந்திரங்களுக்கான 1 மணி நேரத்திற்கான வாடகை ரூ.2,400, டயர் டைப் அறுவடை எந்திரங்களுக்கான வாடகை ரூ.1, 700 என நிர்ணயம் செய்யப்பட்டது. அவ்வாறு நிர்ணயம் செய்யப்பட்ட வாடகைக்கு அதிகமாக கேட்டால்  தாசில்தார்கள் அல்லது வேளாண் பொறியியல் துறை அலுவலர்களுக்கு புகார் கொடுக்கலாம். மேலும் உழவன் செயலி மூலமாகவோ அல்லது உதவி செயற்பொறியாளர், வேளாண் பொறியியல் துறை, சாமந்தான்பேட்டை, நாகை அலுவலகத்தில் விண்ணப்பித்து, நாகை மாவட்டத்தின் விவசாயிகள் குறைந்த வாடகை தொகையில் வேளாண் பொறியியல் துறை எந்திரங்களை பெற்றுக்கொள்ளலாம் என அவர் கூறியுள்ளார்.