இலங்கையில் நடைபெற்று வரும் ஐசிசி டி20 உலகக் கோப்பைத் தொடரின் சூப்பர்-8 சுற்று ஆட்டத்தில், பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகள் செவ்வாய்க்கிழமை மோதின. இந்தப் போட்டியின் போது மைதானத்தில் பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து ரசிகர்களிடையே ஏற்பட்ட பயங்கர மோதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பல்லேகலே சர்வதேச மைதானத்தில் போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, சவுத் என்ற பாகிஸ்தான் ரசிகருக்கும், இங்கிலாந்து ரசிகர் ஒருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இது ஒருகட்டத்தில் கைகலப்பாக மாறியது. இருதரப்பினரும் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டதால் மைதானத்தில் பதற்றம் நிலவியது. அங்கிருந்த இலங்கை ரசிகர்கள் தலையிட்டு மோதலைக் கலைக்க முயன்றனர்.
இந்த மோதல் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பிரபல சமூக வலைதளவாசி ஜேக் ஜென்னிங்ஸ் இந்த வீடியோவைப் பகிர்ந்து, அந்தப் பாகிஸ்தான் ரசிகர் தொடர்ந்து மற்றவர்களைத் தூண்டிவிடும் வகையில் நடந்துகொள்வதாகக் குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து ஐசிசி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இருப்பினும், இங்கிலாந்து ரசிகர்களே முதலில் தன்னிடம் தவறாக நடந்துகொண்டதாகவும், அவர்கள் தன் மீது பீரை ஊற்றியதாலேயே மோதல் வெடித்ததாகவும் பாகிஸ்தான் ரசிகர் சவுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இங்கிலாந்து அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது. இதன் மூலம் 2026 டி20 உலகக் கோப்பையில் அரையிறுதிக்குத் தகுதி பெற்ற முதல் அணியாக இங்கிலாந்து உருவெடுத்தது.
Play silly games, win silly prizes.
Serial offender. Time for the @ICC to take a stand. #cricket #worldcup pic.twitter.com/pdbrAG13tY
— Jake Jeakings (@JakeJeakings1) February 24, 2026
இந்தத் தோல்வியின் மூலம் பாகிஸ்தான் அணியின் அரையிறுதி வாய்ப்பு கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துள்ளது. நியூசிலாந்துக்கு எதிரான முதல் போட்டி மழையால் கைவிடப்பட்ட நிலையில், தற்போது இங்கிலாந்திடமும் தோற்றுள்ளதால் பாகிஸ்தான் ஒரு புள்ளியுடன் இக்கட்டான நிலையில் உள்ளது. தனது கடைசி ஆட்டத்தில் இலங்கையை வீழ்த்தினாலும், மற்ற அணிகளின் வெற்றி தோல்வி முடிவுகளைப் பொறுத்தே பாகிஸ்தானின் அடுத்தகட்ட நகர்வு அமையும்.
