பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் பாபர் அசாமை அணியில் கையாண்ட விதம் குறித்து, அந்த அணியின் பயிற்சியாளர் மைக்கேல் ஹெசனுக்கு இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் பாராட்டு தெரிவித்துள்ளார். பாபர் அசாமை ஒரு ‘பாதுகாப்பு கவசம்’  போல பயிற்சியாளர் பயன்படுத்தி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

டி20 உலகக் கோப்பையின் சூப்பர்-8 சுற்று ஆட்டத்திற்கு முன்னதாக வாக் கூறுகையில், “பாகிஸ்தான் கிரிக்கெட்டில் நிலவும் அரசியல் சூழலில் பாபர் அசாமை அணியிலிருந்து நீக்குவது என்பது முடியாத காரியம். இதை மைக்கேல் ஹெசன் மிகச்சிறப்பாகப் புரிந்து கொண்டுள்ளார். பாபர் அசாமை தொடக்க வீரராகக் களம் இறக்காமல், 4-வது இடத்தில் களமிறக்குவது ஒரு சிறந்த வியூகம். தொடக்கத்திலேயே இரண்டு விக்கெட்டுகள் விழுந்துவிட்டால், அணியைச் சரிவிலிருந்து மீட்கும் ஒரு ‘இன்சூரன்ஸ் பாலிசி’யாக பாபர் செயல்படுகிறார்” என்றார்.

மேலும் பேசிய வாகன், “இலங்கையின் ஆடுகளங்கள் 150 முதல் 180 ரன்கள் வரை எடுக்கக்கூடிய மெதுவான தன்மை கொண்டவை. இத்தகைய சூழலில் பாபர் அசாம் போன்ற ஒரு நிதானமான வீரர் அணிக்கு அவசியம். அவர் 125-130 ஸ்டிரைக் ரேட்டில் விளையாடினாலும் அது அணிக்கு வலுசேர்க்கும். அவரைச் சுற்றியுள்ள மற்ற வீரர்கள் அதிரடியாக விளையாடினால் பாகிஸ்தான் நல்ல ஸ்கோரை எட்ட முடியும். ஆனால், 200 ரன்களுக்கு மேல் தேவைப்படும் அதிரடி ஆட்டங்களுக்கு பாபர் இனி சரிபட்டு வருவார் என்று எனக்குத் தோன்றவில்லை” எனத் தெரிவித்தார்.

பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளராக இருப்பது மிகப்பெரிய சவால் என்று குறிப்பிட்ட வாகன், அந்த நெருக்கடியையும் அரசியலையும் மைக்கேல் ஹெசன் திறமையாகக் கையாண்டு வருவதாகப் புகழ்ந்தார். ஜெய்சன் கில்லெஸ்பி போன்ற பயிற்சியாளர்களிடம் பேசியபோது பாகிஸ்தான் கிரிக்கெட்டில் உள்ள சிக்கல்களைப் புரிந்து கொண்டதாகவும், அதையும் மீறி ஹெசன் செயல்படுவது பாராட்டுக்குரியது என்றும் அவர் கூறினார்.