கிரிக்கெட் விளையாட்டில் எப்போது யாருடைய அதிர்ஷ்டம் மாறும் என்பதை கணிக்கவே முடியாது என்பதற்கு இந்தியாவைச் சேர்ந்த நிஹில் சௌத்ரி ஒரு சிறந்த உதாரணமாக மாறியுள்ளார். டெல்லியில் பிறந்து, பஞ்சாப் மாநிலத்திற்காக உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் விளையாடிய ஆல்-ரவுண்டரான நிஹில் சௌத்ரி, தற்போது வங்காளதேசத்திற்கு எதிரான டி20 தொடருக்கான ஆஸ்திரேலிய தேசிய அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இத்தொடரில் விளையாடும் அணியில் அவருக்கு வாய்ப்பு கிடைத்தால், கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலான கிரிக்கெட் வரலாற்றில், ஆஸ்திரேலிய அணிக்காக விளையாடும் இந்தியாவில் பிறந்த முதல் ஆண் கிரிக்கெட் வீரர் என்ற பிரம்மாண்ட சாதனையை அவர் படைப்பார். இதற்கு முன்பு கடந்த 1964ஆம் ஆண்டு குஜராத்தில் பிறந்த லெக் ஸ்பின்னர் ரெக்ஸ் செல்லர்ஸ் என்பவர் ஆஸ்திரேலிய அணியில் விளையாடியிருந்தார். அதன் பிறகு தற்போதுதான் இந்தியாவில் பிறந்த ஒரு வீரருக்கு இந்த அறிய வாய்ப்பு கிடைத்துள்ளது.
Nikhil Chaudhary could become the first Indian Born man to play for Australia in more than 60 years. pic.twitter.com/8YmRg0YAlC
— 𝓜𝓲𝓬𝓱𝓪𝑒𝓵 (@Rolex8170) June 11, 2026
ஆஸ்திரேலியாவின் முன்னணி வீரர் டிராவிஸ் ஹெட்டின் வருகை தள்ளிப்போவதால், அதற்குப் பதிலாக நிஹில் சௌத்ரிக்கு இந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவின் ‘பிக் பாஷ்’ டி20 லீக் தொடரில் அவர் காட்டிய அதிரடி ஆட்டமே இந்தத் தேர்வுக்கு முக்கியக் காரணம் என்று அந்நாட்டுத் தேர்வுக்குழு தெரிவித்துள்ளது. சுவாரசியமான விஷயம் என்னவென்றால், நிஹில் சௌத்ரிக்கு இன்னும் ஆஸ்திரேலிய குடியுரிமை கிடைக்கவில்லை.
இருப்பினும், கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக அங்கு நிரந்தரமாக வசித்து வருவதால், சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ICC) விதிகளின்படி அவர் ஆஸ்திரேலிய அணிக்காக விளையாட முழு தகுதி பெற்றுள்ளார். ஆரம்பகாலத்தில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் சுப்மன் கில்லுடன் பஞ்சாப் அணியில் இணைந்து விளையாடிய நிஹில் சௌத்ரி, வரும் ஜூன் 17ஆம் தேதி தொடங்கும் வங்காளதேச தொடரில் ஆஸ்திரேலியா ஜெர்சியை அணிந்து வரலாறு படைப்பாரா என்று ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமே ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கிறது.
