முயற்சி திருவினையாக்கும்” என்ற பொன்மொழிக்கு ஏற்ப, சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த 23 வயது இளம் பெண் சாரு பாண்டே, தனது அசாத்திய உழைப்பால் நாடு போற்றும் சாதனையைப் படைத்துள்ளார். லட்சக்கணக்கான இளைஞர்கள் ஒரு அரசு வேலைக்காகக் காத்துக்கொண்டிருக்கும் வேளையில், சாரு பாண்டே மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (SSC), வங்கிப் பணிகள் (IBPS, SBI), ரயில்வே மற்றும் காவல்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் 19 அரசுப் போட்டித் தேர்வுகளில் அடுத்தடுத்து தேர்ச்சி பெற்று புதிய உலக சாதனை படைத்துள்ளார்.
இவருடைய இந்த அசாத்திய சாதனையப் பாராட்டி, வரும் சுதந்திர தின விழாவில் இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு அவா்களால் சாரு பாண்டேவுக்கு ‘தங்கப் பதக்கம்’ வழங்கி கௌரவிக்கப்பட உள்ளது. சத்தீஸ்கரின் ராய்ப்பூர் மாவட்டத்தில் உள்ள தில்தா-நெவ்ரா என்ற சிறிய நகரைச் சேர்ந்த சாரு, தற்போது நாட்டின் லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு ஒரு சிறந்த முன்மாதிரியாகவும், உத்வேகமாகவும் மாறியுள்ளார்.
துர்க் நகரில் உள்ள ஹேம்சந்த் யாதவ் பல்கலைக்கழகத்தில் கணிதப் பிரிவில் பி.எஸ்.சி (B.Sc) பட்டம் பெற்ற சாரு, கல்லூரிப் படிப்பின் போதே போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகத் தொடங்கினார். தற்போது சென்னை சிஏஜி (CAG) அலுவலகத்தில் உதவி தணிக்கை அதிகாரியாக பணியாற்றி வரும் இவர், எஸ்எஸ்சி சிஜிஎல், சிஎச்எஸ்எல், எஸ்பிஐ பிஓ, ரயில்வே என்டிபிசி மற்றும் டெல்லி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட நாட்டின் மிகக் கடினமான 19 தேர்வுகளைத் தகர்த்தெறிந்துள்ளார்.
தனது ஆரம்பகாலத் தோல்விகளால் முடங்கிவிடாமல், தொடர் மாதிரித் தேர்வுகள் மற்றும் சுயமதிப்பீடு மூலம் தனது பலவீனங்களைச் சரிசெய்ததே இந்த அசுர வெற்றிக்குக் காரணம் என்று சாரு பாண்டே கூறுகிறார். ஒரு சிறிய நகரத்தில் பிறந்து, முறையான திட்டமிடல் மற்றும் விடாமுயற்சியால் இமாலய இலக்கை அடைந்த சாருவின் இந்த சாதனை சத்தீஸ்கர் மாநிலத்திற்கு மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த இந்தியாவிற்கே பெருமிதத்தை சேர்த்துள்ளது.
