மேற்கு வங்கத்தில் விரைவில் நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலை முன்னிட்டு, திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் பிரச்சாரத்தை தீவிரப்படுத்தியுள்ளது. அந்த கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அபிஷேக் பானர்ஜி, பெங்கால் மீண்டும் வெற்றி பெறும் என்ற பெயரில் 19 நாட்கள் மாநிலம் தழுவிய பிரசாரத்தை மேற்கொண்டு வருகிறார்.
இந்த பயணத்தின் ஒரு பகுதியாக, பாஜகவின் செல்வாக்கு மிகுந்த அலிபுர்துவார் பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவர் கலந்து கொண்டு பேசினார். அப்போது மத்திய அரசு மற்றும் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகளை அவர் கடுமையாக விமர்சித்தார். குறிப்பாக, வாக்காளர் பட்டியலில் இருந்து உயிருடன் இருப்பவர்களின் பெயர்களை நீக்குவதாகவும், இறந்தவர்களின் பெயர்களை சேர்ப்பதாகவும் குற்றம் சாட்டிய அவர், தலைமை தேர்தல் ஆணையரை மந்திரவாதி எனச் சாடினார்.
தொடர்ந்து பேசிய அபிஷேக் பானர்ஜி, 10 ஆண்டுகளுக்கு முன்பு கருப்புப் பணத்தை ஒழிப்பதாகக் கூறி மக்களை நீண்ட வரிசையில் காத்திருக்க வைத்தவர்கள், தற்போது வாக்காளர் பட்டியல் திருத்தம் என்ற பெயரில் மீண்டும் மக்களை அலைக்கழிப்பதாகத் தெரிவித்தார். முன்னதாக மக்கள் தங்களுக்குத் தேவையான அரசைத் தேர்வு செய்த நிலை மாறி, தற்போது அரசே தனது வாக்காளர்களை முடிவு செய்ய விரும்புவதாக அவர் குற்றம் சாட்டினார்.
மேலும், பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்களைப் பாம்புகளுடன் ஒப்பிட்டுப் பேசிய அவர், அவர்களுக்குப் பால் ஊற்றி வளர்த்தாலும் இறுதியில் அவர்கள் மக்களையே கடிப்பார்கள் என்று கடுமையாக விமர்சித்தார். இந்த முறை திரிணாமுல் காங்கிரசுக்கு வாய்ப்பு அளிக்குமாறும், வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறினால் அடுத்த முறை தங்களை நீக்கிவிடலாம் என்றும் அவர் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்தார்.
