பீகார் மாநில அரசு நிகழ்ச்சியில் பெண் மருத்துவரின் முகத்திலிருந்து ஹிஜாப்பை நிதிஷ் குமார் அகற்றியது நாடு முழுவதும் விவாதமானது.

இதற்கு ஆதரவாகப் பேசிய உத்தரப்பிரதேச அமைச்சர் சஞ்சய் நிஷாத், “அவர் அந்தப் பெண்ணை வேறு எங்கேனும் தொட்டிருந்தால் என்னவாகியிருக்கும்?” என்று சர்ச்சைக்குரிய வகையில் கருத்துத் தெரிவித்தார்.

இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில், மகாராஷ்டிராவின் ஜல்னாவில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் பேசிய முன்னாள் எம்.பி. இம்தியாஸ் ஜலீல், “எங்கள் முஸ்லிம் சகோதரிகளை எவராவது தவறான எண்ணத்துடன் தொடத் துணிந்தால், அவரது கையை வெட்டுவேன்” என ஆவேசமாக முழங்கினார்.

தங்களை மதச்சார்பற்றவர்கள் என்று கூறிக்கொள்ளும் கட்சிகளையும் இம்தியாஸ் ஜலீல் கடுமையாக விமர்சித்தார்.  “ரவுடிகளுக்கும் குற்றப் பின்னணி கொண்டவர்களுக்கும் ஆதரவு அளிக்கத் தயங்காத கட்சிகள், முஸ்லிம்களுக்கு ஆதரவாக நிற்கவும் அவர்களுக்குச் சரியான பிரதிநிதித்துவத்தை வழங்கவும் அஞ்சுகின்றன” என்று சாடினார்.

எம்.ஐ.எம். கட்சியை வகுப்புவாதக் கட்சி என முத்திரை குத்துபவர்கள்தான் உண்மையில் மிகப்பெரிய வகுப்புவாதிகள் எனத் தெரிவித்தார். முஸ்லிம்கள் அரசியலில் தலைவர்களாக உருவெடுப்பதை மற்ற கட்சிகள் விரும்புவதில்லை என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

மகாராஷ்டிரா நகராட்சி தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், ஜலீலின் இந்தப் பேச்சு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.