சென்னை மாவட்டத்தில் உள்ள வெள்ளனுர் கிராமம் விஷ்ணு நகரில் ஆட்டோ டிரைவரான சுரேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் காலி மனை வாங்கி வீடு கட்டினார். அந்த வீட்டிற்கு தற்காலிகமாக மின் இணைப்பு பெற்றுள்ளார். இந்நிலையில் சுரேஷ் வீடு கட்டி முடித்ததால் தற்காலிக மின் இணைப்பை நிரந்தர மின் இணைப்பாக மாற்றி தருமாறு வீராபுரம் மின்வாரிய அலுவலகத்தில் மனு அளித்துள்ளார். அப்போது மின்வாரிய வணிக ஆய்வாளர் அன்பழகன் என்பவர் 2000 ரூபாய் லஞ்சம் கேட்டதாக தெரிகிறது.

இதுகுறித்து சுரேஷ் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். இதனையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசாரின் அறிவுரைப்படி சுரேஷ் ரசாயனம் தடாவிய ரூபாய் நோட்டுகளை அன்பழகனிடம் கொடுத்துள்ளார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அன்பழகனை கையும், களவுமாக பிடித்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் அன்பழகனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.