திருவள்ளூர் மாவட்டம் ஆவடியை அடுத்த கன்னியம்மன் நகர் பகுதியைச் சேர்ந்த ராஜேஷ்குமார் என்பவர் பெயிண்டர் வேலை செய்து வந்துள்ளார். மது பழக்கத்திற்கு அடிமையான இவர் அடிக்கடி மது அருந்திவிட்டு வந்து தனது மனைவி மகேஸ்வரியுடன் தகராறில் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.
சம்பவத்தன்று இரவு வழக்கம்போல் குடிபோதையில் வீட்டிற்கு வந்த ராஜேஷ்குமார் தனது மனைவியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன் அவரது கழுத்தில் இருந்த தாலிச் சங்கிலியைப் பிடித்து இழுத்து அநாகரீகமாக நடந்துகொண்டுள்ளார்.
இதனால் கடும் ஆத்திரமடைந்த மகேஸ்வரி அருகில் இருந்த கேபிள் ஒயரை எடுத்து கணவரின் கழுத்தில் சுற்றி இறுக்கியுள்ளார். இதில் மூச்சுத்திணறி மயங்கி விழுந்த ராஜேஷ்குமாரை ஆம்புலன்ஸ் மூலம் பரிசோதித்தபோது அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டது தெரியவந்தது.
இது குறித்துத் தகவல் அறிந்த ஆவடி டேங்க் பேக்டரி போலீசார் ராஜேஷ்குமாரின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் அடிக்கடி தகராறு செய்த கணவரைக் கொலை செய்த குற்றத்திற்காக மகேஸ்வரியைக் கைது செய்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
