தமிழகத்தில் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பிரதான எதிர்க்கட்சியான அதிமுக தனது தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளது. அதிமுக மற்றும் பாஜக இடையே கூட்டணி உறுதியாகியுள்ள நிலையில், அண்மையில் சென்னை வந்த மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்து தொகுதிப் பங்கீடு குறித்து விரிவான ஆலோசனை நடத்தினார்.
இந்தச் சந்திப்பில் கூட்டணிக் கட்சிகளுக்கான இடங்கள் மற்றும் புதிய கட்சிகளை இணைப்பது குறித்து இறுதி முடிவுகள் எடுக்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. வெற்றியை இலக்காகக் கொண்டு இரு தரப்பும் தேர்தல் களத்தில் ஒன்றிணைந்து செயல்படத் திட்டமிட்டுள்ளன.
இதனைத் தொடர்ந்து, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் பல்வேறு முக்கிய உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. வரும் தேர்தலில் வேட்பாளர் தேர்விலிருந்து வாக்குச் சேகரிப்பு வரை மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும் என்றும், திமுக அரசின் செயல்பாடுகளில் உள்ள குறைகளை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
குறிப்பாக அதிமுகவின் வாக்கு வங்கியில் சிறு சரிவும் ஏற்படாதவாறு தேர்தல் பணிகளைக் கண்காணிக்கவும், வெற்றி வாய்ப்புள்ள வேட்பாளர்களின் பட்டியலை உடனே சமர்ப்பிக்கவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.
