தமிழக சட்டமன்றத் தேர்தல் அறிவிப்பு வரும் பிப்ரவரி மாதமே வெளியாக வாய்ப்புள்ளதாக முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார். சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது:

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான அறிவிப்பு பிப்ரவரி மாதம் வெளியாகலாம். அதனைத் தொடர்ந்து மார்ச் இறுதி அல்லது ஏப்ரல் மாதத் தொடக்கத்தில் தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளது. இந்தத் தேர்தலில், சிறந்த தேர்தல் அனுபவம் கொண்ட ‘இந்தியா’ (INDIA) கூட்டணியே மகத்தான வெற்றி பெறும்.

திமுக தலைமையிலான கூட்டணியில் ஆட்சியில் பங்கு பெறுவது அல்லது கூட்டணி ஆட்சி அமைப்பது குறித்து திமுக மற்றும் காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் ஒன்றிணைந்து முறையான முடிவை எடுப்பார்கள். தொகுதிப் பங்கீடு தொடர்பாக காங்கிரஸ் சார்பில் அமைக்கப்பட்ட குழுவினர் திமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்துவர். எத்தனை தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிடும் என்பதை இரு கட்சிகளின் மேலிடத் தலைவர்களே இறுதி செய்வார்கள்.

நிதி ஆயோக் அமைப்பின் அறிக்கைப் படி, இந்தியாவிலேயே தமிழகம் தான் வளர்ச்சியில் முதலிடத்தில் உள்ளது. சில ‘அறிவுஜீவிகள்’ உத்தரப் பிரதேச மாநிலத்துடன் தமிழகத்தை ஒப்பிட்டுப் பேசுகிறார்கள்; இது முற்றிலும் தவறானது. அத்தகையவர்களுடன் விவாதம் செய்ய நான் விரும்பவில்லை. தேர்தல் நடைபெறுவதற்கு முன்பாக, காரைக்குடியில் வேளாண் பல்கலைக்கழகம் மற்றும் சட்டக் கல்லூரி ஆகியவை மக்கள் பயன்பாட்டிற்குத் திறக்கப்படும்.

மேலும் தமிழக அரசியல் களத்தில் TVK காங்கரஸ்  கூட்டணி குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த ப. சிதம்பரம், “அவருக்கு எனது வாழ்த்துகள். இருப்பினும், அவரது அரசியல் முயற்சி வெற்றி பெறாது” என்று சுருக்கமாகத் தெரிவித்தார்.