தமிழக முதலமைச்சரும், பிரபல நடிகருமான சி. ஜோசப் விஜய் ஏன் எப்போதும் பொது மேடைகளிலும், நிஜ வாழ்க்கையிலும் மிகவும் அமைதியாகவும், குறைவாகப் பேசும் குணத்தோடும் இருக்கிறார் என்பதற்கான நெஞ்சை உலுக்கும் உண்மையான காரணத்தை அவரது தாய் ஷோபா சந்திரசேகர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் வெளிப்படுத்தியுள்ளார். ஆரம்ப காலத்தில் மிகவும் துடிப்பாகவும், சுட்டித்தனமாகவும் இருந்த விஜய், அவரது தங்கை வித்யா 2 வயதில் மரணமடைந்த பிறகு முற்றிலும் தனிமை விரும்பியாக மாறிப்போனார்.

இந்த சோகத்தின் தாக்கம் எந்தளவுக்கு இருந்தது என்றால், குடும்பத்துடன் வெளிநாடுகளுக்குச் சுற்றுலா சென்றால் கூட, மற்றவர்களை ஷாப்பிங் செய்ய அனுப்பிவிட்டு விஜய் மட்டும் அறையிலேயே தனிமையில் நேரத்தைக் கழிப்பார் என்று அவரது தாய் உருக்கமாகக் பகிர்ந்துள்ளார். தங்கையின் நினைவாகவே விஜய் தனது தயாரிப்பு நிறுவனத்திற்கு ‘வித்யா விஜய் புரொடக்ஷன்ஸ்’ என்று பெயர் சூட்டியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

‘தந்தி டிவி’க்கு அளித்த பேட்டியில் ஷோபா சந்திரசேகர் தங்களது ஆரம்பகால வறுமை மற்றும் குடும்பப் பின்னணி குறித்தும் பேசியுள்ளார். விஜய்யின் தந்தை எஸ். ஏ. சந்திரசேகர் உதவி இயக்குநராக இருந்தபோது அவருக்குச் சம்பளம் எதுவும் வழங்கப்படவில்லை, சாப்பாடும் போக்குவரத்துச் செலவும் மட்டுமே கொடுக்கப்பட்டது. முழுநேர சினிமாவுக்காக அவர் தனது அரசு வேலையையும் விட்டதால், ஷோபாவின் இசைக்கச்சேரி வருமானத்தை வைத்தே குடும்பம் நகர்ந்துள்ளது.

இத்தகைய நடுத்தரக் குடும்பத்தில் வளர்ந்த விஜய்யை ஒரு மருத்துவராக ஆக்க வேண்டும் என்பதே பெற்றோரின் ஆசையாக இருந்தது. ஆனால், விஜய் தனது 18 வயது வரை பைலட் (விமானி) ஆக வேண்டும் என்ற கனவோடு இருந்து, பின்னர் திரையுலகிற்குள் நுழைந்தார். பள்ளிப் பருவத்தில் வகுப்பறையில் தங்கை வித்யாவின் பெயர் எப்போது வந்தாலும் விஜய் மிகவும் உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் சிந்துவார் என்பதை அவரது ஆசிரியர்களும் கவனித்துள்ளனர் என்று அவரது தாய் அந்தப் பேட்டியில் தெரிவித்துள்ளார்.

https://www.instagram.com/p/CPF-Z03Dxtr/?utm_source=ig_embed&ig_rid=AvVaezUZiJLMjdehSBN5K2p