தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. பிரதான எதிர்க்கட்சியான அதிமுக, தற்போது பாஜக மற்றும் தமாகா ஆகிய கட்சிகளுடன் கூட்டணியை உறுதி செய்துள்ளது. அண்மையில் சென்னை வந்த மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்துப் பேசியதைத் தொடர்ந்து, தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தைகள் இறுதி நிலையை எட்டியுள்ளதாகக் கூறப்படுகிறது.
கூடுதல் கட்சிகளைத் தங்களது கூட்டணியில் இணைப்பது குறித்தும் இந்தச் சந்திப்பில் விரிவாக விவாதிக்கப்பட்டுள்ளது. தேர்தல் நெருங்கும் வேளையில், எடப்பாடி பழனிசாமி தலைமையில் சென்னையில் இன்று நடைபெற்ற மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.
இக்கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, கூட்டணி விவகாரங்களைத் தான் கவனித்துக் கொள்வதாகவும், நிர்வாகிகள் அனைவரும் களத்தில் இறங்கி மக்கள் பணியாற்றுமாறும் அறிவுறுத்தினார். குறிப்பாக, வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்யும் பணிகளைக் கண்காணிக்குமாறும், அதிமுகவின் வாக்குகள் ஒருபோதும் சிதறிவிடக் கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார்.
மேலும், ஒவ்வொரு தொகுதியிலும் வெற்றி வாய்ப்புள்ள வேட்பாளர்களின் பட்டியலை உடனடியாகச் சமர்ப்பிக்க மாவட்டச் செயலாளர்களுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.
