சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழக அரசியல் களம் மற்றும் மொழி விவகாரங்கள் குறித்து அனல் பறக்கப் பேசினார்.

அப்போது செய்தியாளர் ஒருவர் குறுக்கிட்டுத் தொடர்ந்து கேள்வி எழுப்பவே, பொறுமையிழந்த சீமான், “தம்பி நான் ஒரு பயணமாகப் போய்க்கொண்டிருக்கிறேன், காலையிலேயே என்னைத் திட்டமிட்டு வெறியாக்காதே, எரிச்சல் ஊட்டாதே” என்று ஒருமையில் எச்சரித்தார்.

“கீழடி நாகரீகத்தைத் தமிழர் நாகரீகம் என்று சொல்வதில் உங்களுக்கு என்ன பிரச்சனை? பெருவுடையார் கோயிலைத் திராவிடக் கட்டிடக் கலை என்று சொல்வதால்தான் எனக்கு வெறி ஆகிறது” எனத் தனது ஆதங்கத்தைக் கொப்பளித்தார்.

விசிக தலைவர் திருமாவளவனின் விமர்சனங்களுக்குப் பதிலளித்த சீமான், “பாஜக-வுடன் கூட்டணி வைத்து எம்.எல்.ஏ ஆனது அண்ணன் திருமாவா அல்லது நானா?” என்று அதிரடியாகக் கேள்வி எழுப்பினார்.

வாஜ்பாய்க்கு வீரவணக்கம் செலுத்துவது அரசியல் நாகரீகம் என்றால், தான் பாரதியார் மேடையில் ஏறுவது அநாகரீகமா என்றும் அவர் சாடினார்.

“திராவிடர் கழகத்தில் இருந்து பிரிந்து வந்த திமுக, பெரியாரை எப்படி எல்லாம் பேசியது என்பது எனக்குத் தெரியும்; இங்கே நடப்பது திராவிடர் – தமிழர் இடையிலான போர்” என்று குறிப்பிட்ட அவர், தான் யாரையும் தனிப்பட்ட முறையில் எதிர்க்க வரவில்லை என்றும், இனத்தின் அடையாளத்தை மீட்கவே போராடுவதாகவும் ஆவேசமாகத் தெரிவித்தார்.