2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், அமமுகவின் கூட்டணிக் குறித்துப் பேசிய டிடிவி தினகரன், தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பே அமமுகவின் கூட்டணி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று தெரிவித்துள்ளார். குறிப்பாக, பல கட்சிகள் தங்களை நோக்கி கூட்டணிப் பேச்சுவார்த்தைக்கு வந்திருப்பதை உறுதிப்படுத்திய அவர், “எவ்வளவு அழுத்தம் கொடுத்தாலும் இனி பாஜக கூட்டணியில் இணைய முடியாது” என்று மிகத் தெளிவாகவும் வெளிப்படையாகவும் மறுத்துள்ளார்.
கடந்த தேர்தல்களில் பெற்ற அனுபவங்களைக் கருத்தில் கொண்டு, கட்சியின் நலன் மற்றும் தமிழக மக்களின் நலனை முன்வைத்து இந்தத் தடவை தை மாதத்திற்குப் பிறகு கூட்டணி குறித்த முடிவை அறிவிப்போம் என்று அவர் கூறியுள்ளார். மேலும், அமமுக 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வலுவான கட்டமைப்பைக் கொண்டுள்ளதாகவும், வரும் தேர்தலில் தங்கள் கட்சி வேட்பாளர்கள் நிச்சயம் சட்டப்பேரவைக்குள் நுழைவார்கள் என்றும் நம்பிக்கையோடு தெரிவித்தார்.
