மத்தியப் பிரதேச மாநிலம் மொரினா மாவட்டத்தில் உள்ள ராஜாராம் கா புரா கிராமத்தில் இந்தத் துயரச் சம்பவம் நடந்துள்ளது. அந்தப் பகுதியைச் சேர்ந்த தலித் குடும்பத்தினர், தங்கள் நிலத்தில் விளைந்திருந்த கம்பு (Bajra) பயிர்களைப் பாழாக்கும் வகையில் கால்நடைகளை மேய்க்க வேண்டாம் எனத் தடுத்துள்ளனர்.

இதனால் ஆத்திரமடைந்த கும்பல், அத்துமீறி அந்தக் குடும்பத்தின் வீட்டிற்குள் புகுந்து சரமாரியாகத் துப்பாக்கியால் சுட்டும், தடிகளால் அடித்தும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இந்தக் கொடூரத் தாக்குதலில் ரமேஷ் ஜாதவ், மகாராஜ் ஜாதவ் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கையில் தடிகளுடன் இளைஞர்கள் கும்பலாகத் தாக்குதல் நடத்தும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 பன்வாரி குர்ஜார் மற்றும் அவரது ஆட்கள் தான் இந்தத் தாக்குதலில் ஈடுபட்டதாகப் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர். ஆரம்பத்தில் வழக்குப் பதிவு செய்யப் போலீஸார் தாமதம் செய்ததாக அந்தக் குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

தற்போது வீடியோ ஆதாரங்களின் அடிப்படையில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். நிலத் தகராறு காரணமாக ஒரு குடும்பத்தையே துப்பாக்கியுடன் வந்து மிரட்டிய சம்பவம் அந்தப் பகுதியில் பதற்றத்தை உருவாக்கியுள்ளது.