உத்தரப்பிரதேச மாநிலத்தில் புத்தாண்டுடன் தொடங்கிய கடும் குளிரால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மாணவர்களின் பாதுகாப்பைக் கருதி ஜனவரி 5-ஆம் தேதி வரை அனைத்துப் பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவித்து முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ மற்றும் மாநில பாடத்திட்டம் உள்ளிட்ட அனைத்து வகைப் பள்ளிகளுக்கும் 12-ஆம் வகுப்பு வரை இந்த உத்தரவு பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், குளிரின் தாக்கம் அதிகமாக இருப்பதால், ஏழை எளிய மக்கள் பாதிக்கப்படாமல் இருக்க போர்வைகள் வழங்கவும், பொது இடங்களில் தீ மூட்டி குளிர்காய வசதி செய்யவும் அதிகாரிகளுக்கு முதல்வர் அறிவுறுத்தியுள்ளார். வீடற்றவர்கள் சாலைகளில் உறங்குவதைத் தவிர்த்து, இரவு நேரக் காப்பகங்களில் அவர்கள் தங்க முழுமையான ஏற்பாடுகளைச் செய்யுமாறு அவர் உத்தரவிட்டுள்ளார்.

இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தகவல்படி, உத்தரப்பிரதேசத்தின் பல பகுதிகளில் பனிமூட்டம் மற்றும் கடும் குளிர் நீடிக்க வாய்ப்புள்ளது. குறிப்பாக கோரக்பூர், கான்பூர் மற்றும் அலகாபாத் போன்ற நகரங்களில் பனிமூட்டம் காரணமாகப் பார்வைத் திறன் பூஜ்ஜியமாக குறைந்துள்ளதால் சாலை மற்றும் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

லக்னோ, வாரணாசி போன்ற நகரங்களிலும் கடுமையான பனிமூட்டம் நிலவி வருகிறது. வரும் ஜனவரி 5-ஆம் தேதி வரை மாநிலத்தின் பல பகுதிகளில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட 5 டிகிரி செல்சியஸ் வரை குறைய வாய்ப்புள்ளதால், முதியவர்கள் மற்றும் குழந்தைகள் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.