சமூக ஆர்வலர் ராம காங்கொண்கர் மீது வியாழக்கிழமை கொடூரமான தாக்குதல் நடந்துள்ளது. காரஞ்சலம் பகுதியில் நடந்து சென்ற அவரை மர்மநபர்கள் குழுவாக வந்து, நடு ரோட்டில் வைத்து மோசமாக அடித்து தாக்கினர். முகத்தில் மாட்டுச் சாணம் பூசி, அருகிலிருந்த பூங்கா அருகே அவரை தூக்கி வீசினார்கள். “கோவாவைக் காப்பாற்ற வர்றியா? இப்போ பாரு!” என்று கத்தி, துப்பாக்கியுடன் மிரட்டியதாக காங்கொண்கர் புகார் அளித்துள்ளார்.
இந்த சம்பவம் திரண்ட கோவா மக்களிடையே கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. வெள்ளிக்கிழமை, பணாஜி காவல் துறை தலைமை அலுவலகம் முன் ஆயிரக்கணக்கான மக்கள் கூடி, அரசு மற்றும் போலீசாரை கடுமையாக கண்டித்தனர். ஆளும் பாஜக அலுவலகத்திற்குள் நுழைய மக்கள் முயற்சித்ததாக கூறப்படுகிறது. அலுவலகத்தில் சேதம் ஏற்படுத்தப்பட்ட நிலையில், போலீசார் வாக்குவாதத்தில் ஈடுபட்ட 5 பேரை கைது செய்துள்ளனர்.
ராம காங்கொண்கர் 2022ல் நடந்த சட்டமன்றத் தேர்தலில் ஸெயின்ட் ஆண்ட்ரே தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்டு வெறும் 219 வாக்குகளை பெற்று தோல்வியடைந்திருந்தார். அவரது சொத்துகள் ₹5.38 லட்சம் மட்டுமே, ஆனால் கடன்கள் ₹19.45 லட்சம் என தேர்தல் ஆவணங்களில் உள்ளது. 12ம் வகுப்பு வரை மட்டும் படித்த அவர் மீது ஏற்கனவே 4 கிரிமினல் வழக்குகள் உள்ளன. கடந்த பிப்ரவரியில் முதல்வர் பிரமோத் சாவந்த் மீது அவதூறான மற்றும் மிரட்டல் வார்த்தைகள் பேசியதாக அவர் கைது செய்யப்பட்டிருந்தார்.
