தவெக தலைவர் விஜய், வரும் செப்டம்பர் 13-ம் தேதி திருச்சியில் இருந்து சட்டப்பேரவை தேர்தல் பிரசார சுற்றுப் பயணத்தை தொடங்கவிருக்கிறார். இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், திருச்சி மாநகர காவல்துறையில் அனுமதி கேட்டு விண்ணப்பிக்கப்பட்டது. ஆனால், தவெக தரப்பின் தகவலின்படி, விஜய் பிரசாரம் செய்ய தேர்ந்தெடுக்கப்பட்ட இடத்திற்கு போலீசார் அனுமதி வழங்க மறுத்துள்ளனர். இதனால் கட்சி வட்டாரத்தில் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், தவெக தேர்தல் பிரச்சார மேலாண்மைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா, அரசாங்கத்தையும் காவல்துறையையும் கடுமையாக விமர்சித்துள்ளார். “நமது தலைவர் விஜய், மக்களை நேரில் சந்திக்க விரும்புகிறார் என்பதற்கு இவ்வளவு எதிர்ப்பு. இது, அவருக்கு மக்களிடம் உள்ள பேராதரவை தாங்க முடியாமல் அரசு நடக்கும் அதிர்ச்சியின் வெளிப்பாடு,” என அவர் தெரிவித்தார்.
மேலும், “ஏற்கனவே எம்.ஜி.ஆர் மீது நடந்தது போல, இன்றும் அதிகாரத்தின் அடக்குமுறையை பயன்படுத்துகிறது தி.மு.க அரசு. ஆனால் வரலாறு என்ன சொல்கிறது? மக்களே முடிவு செய்கிறார்கள்,” என்றும் கூறினார். “விஜயின் மீது மக்கள் கொண்டிருக்கும் நம்பிக்கை, அரசை கலங்கடிக்கும் அளவுக்கு உயர்ந்துவிட்டது.
அது தான் அவர்களை இப்போது நடவடிக்கை எடுக்கத் தூண்டுகிறது. ஆனால் ஜனநாயக நாட்டில் இதுபோன்று ஒரு தலைவரின் மக்கள் சந்திப்பை தடுக்க முடியாது. அதிகாரத்தின் பேரில் மக்கள் விருப்பங்களை அடக்க முயன்றவர்கள் வரலாற்றில் தோல்வியடைந்துள்ளனர்,” எனவும் ஆதவ் அர்ஜுனா வலியுறுத்தினார்.
