சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தமிழகத்தில் போதைப்பொருள் உற்பத்தி எங்கும் நடைபெறவில்லை என்றும் அவை குஜராத் மாநிலத்திலிருந்துதான் கடத்தி வரப்படுவதாகவும் தெரிவித்தார்.
பள்ளி மற்றும் கல்லூரிப் பகுதிகளுக்கு அருகில் போதைப்பொருள் நடமாட்டம் இருக்கிறதா என்பதைக் கண்காணிக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர் அதிமுக ஆட்சிக்காலத்தை விட தற்போது சட்டம் ஒழுங்கு சிறப்பாகக் காப்பாற்றப்பட்டு வருவதாகக் கூறினார்.
பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்ற போலி நாடகத்தை மத்திய அரசும் எடப்பாடி பழனிசாமியும் இணைந்து உருவாக்க முயற்சிப்பதாகக் குற்றம் சாட்டிய அமைச்சர் திமுக அரசின் மீதான நம்பிக்கையால்தான் பெண்கள் தற்போது அதிக அளவில் புகாரளிக்க முன்வருகின்றனர் என்று தெரிவித்தார்.
மேலும் தமிழகத்தில் திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும் என்பதே மக்களின் விருப்பமாக உள்ளதாகவும் 80 சதவீதப் பெண்கள் திமுக கூட்டணிக்கே வாக்களிக்கப் போவதாகத் தகவல்கள் வருவதாகவும் அவர் கூறினார். தமிழ்நாடு அமைதிப் பூங்காவாகத் திகழ்வதாகவும் எடப்பாடி பழனிசாமியையோ அவரது கொள்கைகளையோ தமிழக மக்கள் ஒருபோதும் நம்பத் தயாராக இல்லை என்றும் அமைச்சர் ரகுபதி விமர்சித்தார்.
அதிமுகவின் பத்து ஆண்டுகால ஆட்சியை விட மக்கள் தற்போது அதிக பாதுகாப்புடன் இருப்பதாகவும் திராவிட மாடல் ஆட்சியின் மீதான மக்களின் நம்பிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும் அவர் தனது பேட்டியில் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
