ஜார்கண்ட் மாநிலத்தில் ரயில்வே ஊழியரின் அலட்சியத்தால் ஒரு மிகப்பெரிய விபத்து அரங்கேறியுள்ளது. ரயில் வரும் நேரத்தில் கேட் திறந்தே இருந்ததால், லாரி மீது ரயில் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோரக்பூரிலிருந்து அசன்சோல் நோக்கி விரைவு ரயில் ஒன்று இன்று காலை சென்று கொண்டிருந்தது. தேவ்கர் அருகே உள்ள நவாடிஹ் ரயில்வே கேட் பகுதிக்கு ரயில் வந்தபோது, அங்கு கேட் மூடப்படாமல் திறந்தே இருந்துள்ளது.

இதையறியாத லாரி ஓட்டுநர் தண்டவாளத்தைக் கடக்க முயன்றார். அப்போது மின்னல் வேகத்தில் வந்த ரயில், லாரியின் மீது பயங்கரமாக மோதியது.

ரயில் மோதிய வேகத்தில் கட்டுப்பாட்டை இழந்த லாரி, அருகில் நின்று கொண்டிருந்த பைக்குகள் மீது மோதிச் சரிந்தது. இதில் இரண்டு பைக் வாகன ஓட்டிகள் படுகாயமடைந்தனர்.

அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை. இந்த விபத்தின் வீடியோ இப்போது சமூக வலைதளங்களில் வெளியாகி காண்போரை அதிர வைத்துள்ளது. இந்த விபத்து காரணமாக அந்தப் பாதையில் சுமார் 6 மணி நேரத்திற்கும் மேலாகப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.