விருந்தினரே தெய்வம் என்ற இந்தியப் பண்பாட்டிற்குச் சான்றாக டெல்லியில் ஒரு நெகிழ்ச்சியான சம்பவம் நடந்துள்ளது. முதல்முறை இந்தியா வந்த ஒரு பயணிக்கு டெல்லி வாசிகள் கொடுத்த வரவேற்பு இப்போது உலகளவில் பேசப்பட்டு வருகிறது.

அமெரிக்காவைச் சேர்ந்த ஆஸ்டின் என்ற டிராவல் வலாகர் (Travel Vlogger), இந்தியா வந்த தனது முதல் நாள் காலை டெல்லியில் உள்ள ஒரு பூங்காவில் நடைப்பயிற்சி மேற்கொண்டுள்ளார்.

அப்போது அங்கிருந்த ஒரு பெரியவர் அவரை அருகில் அழைத்து, தங்களது காலை உணவான டீ மற்றும் பிரட்-சீஸ் துண்டுகளைக் கொடுத்து உண்ணுமாறு அன்புடன் கேட்டுள்ளார்.

இந்த எதிர்பாராத உபசரிப்பால் திக்குமுக்காடிப் போன ஆஸ்டின், “இந்தியாவில் எனது முதல் நாள் இது. அறிமுகமே இல்லாதவர்கள் என்னை அழைத்து டீயும், உணவும் தருகிறார்கள்.

இதுபோன்ற ஒரு அனுபவத்தை நான் எந்த நாட்டிலும் பெற்றதில்லை. இந்திய உபசரிப்பு உண்மையிலேயே ஒரு கனவு போல இருக்கிறது” என வீடியோவில் உருக்கமாகப் பேசியுள்ளார். இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட சில மணி நேரங்களிலேயே லட்சக்கணக்கான பார்வைகளைப் பெற்று வைரலாகி வருகிறது.