இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்களில் பளபளப்பாகத் தெரியும் இந்திய ரயில்களின் மறுபக்கத்தை வெளிநாட்டவர் ஒருவர் போட்டு உடைத்திருப்பது இப்போது பேசுபொருளாகியுள்ளது.

சிங்கப்பூரைச் சேர்ந்த அந்தப் பெண், இந்திய ரயில் ஒன்றின் பொதுப் பெட்டியில் ஏறுகிறார். பெட்டிக்குள் நுழைந்ததுமே அங்கிருந்த துர்நாற்றம் மற்றும் அசுத்தத்தைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அவர், உடனடியாகத் தனது கைகளால் மூக்கை மூடிக்கொள்கிறார்.

அந்த 15 வினாடி வீடியோவில், அவர் இருக்கையைத் தேடிச் செல்லும்போது மிகவும் அசௌகரியமாக உணர்வதை நம்மால் பார்க்க முடிகிறது.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, “ஏசி பெட்டிகளே மோசமாக இருக்கும்போது பொதுப் பெட்டியைப் பற்றிச் சொல்லவா வேண்டும்?” என ஒரு தரப்பினரும், “மிகக் குறைந்த கட்டணத்தில் பயணம் செய்யும் போது உலகத்தரம் வாய்ந்த சேவையை எதிர்பார்ப்பது தவறு. வசதி வேண்டுமென்றால் வந்தே பாரத் ரயிலில் செல்ல வேண்டியதுதானே?” என மற்றொரு தரப்பினரும் காரசாரமாக விவாதித்து வருகின்றனர்.