புதுச்சேரி அரசியலில் என்.ஆர். காங்கிரஸ் மற்றும் பாஜக கூட்டணிக்குள் நிலவி வரும் பனிப்போர் தற்போது உச்சகட்டத்தை எட்டியுள்ளது. இந்த முறை அமைச்சரவையில் அதிக இடங்கள் மற்றும் துணை முதல்வர் (DCM) பதவியைக் கேட்டு பாஜக அழுத்தம் கொடுத்து வருவதால் முதல்வர் ரங்கசாமி கடும் அதிருப்தியில் உள்ளதாகத் தெரிகிறது. அதுமட்டுமின்றி, வெற்றி வாய்ப்புள்ள சுயேச்சை வேட்பாளர்களிடம் பாஜக தனிப்பட்ட முறையில் பேச்சுவார்த்தை நடத்தி வருவது ரங்கசாமி தரப்பை கொந்தளிப்பில் ஆழ்த்தியுள்ளது.
பாஜகவின் இந்த அதிரடி நகர்வுகளுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், ரங்கசாமி ஒரு மாற்றுத் திட்டத்தை ரகசியமாகத் தயார் செய்து வருவதாகத் தனியார் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. அதன்படி, பாஜகவை கழற்றிவிட்டு தளபதி விஜய்யின் ‘தமிழக வெற்றிக் கழகத்துடன்’ (TVK) இணைந்து ஆட்சியை அமைக்க அவர் ஆலோசித்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. புதுச்சேரி அரசியலில் ஏற்பட்டுள்ள இந்த திடீர் திருப்பம், தேர்தல் முடிவுகளுக்குப் பிந்தைய ஆட்டத்தில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
