“காதல் என்பது ஒரு அழகான ஏமாற்றம்” என்பார்கள். ஆனால், அந்த ஏமாற்றமே ஒரு திட்டமிடப்பட்ட குற்றமாக மாறினால்? மும்பையின் சாகி நாகா பகுதியில் அரங்கேறிய ஒரு பகீர் டேட்டிங் மோசடியும், அதை ஒரு சினிமா ஹீரோ போல முறியடித்த சமூக ஆர்வலர் பங்கஜின் அதிரடி கதையும் தான் இது.

​அந்த ‘மேட்ச்’ ஆரம்பித்த இடம்

​மும்பையைச் சேர்ந்த 38 வயது பங்கஜ், தனது மொபைலில் டேட்டிங் ஆப் ஒன்றைத் திறக்கிறார். சில நிமிடங்களிலேயே 18 வயது ‘மஹிமா’விடம் இருந்து ஒரு மேட்ச் கிடைக்கிறது. மஹிமாவின் வசீகரமான புன்னகை, மென்மையான பேச்சு.. என அனைத்தும் ஒரு கனவு போலத் தொடங்குகிறது. ஆனால், பங்கஜுக்குத் தெரியும் இது ஒரு ‘தூண்டில்’ என்று! ஆம், தனது நண்பர் ஒருவரை இதே கும்பல் மிரட்டிப் பணம் பறித்ததைக் கண்டு ஆவேசமடைந்த பங்கஜ், இந்தக் கும்பலை வேரோடு அறுத்தெறியத் தானே களத்தில் இறங்கினார்.

​கஃபேக்குள் நடந்த ‘ஸ்கெட்ச்’

​மார்ச் 14-ம் தேதி.. மஹிமா சொன்ன அதே இடத்திற்கு பங்கஜ் செல்கிறார். “இங்க பக்கத்துலயே ஒரு கிளப் கஃபே இருக்கு, அங்க போலாம்” என மஹிமா அழைக்க, பங்கஜின் காரிலேயே இருவரும் செல்கிறார்கள். உள்ளே சென்றதும் மஹிமா ‘மிகவும் இயல்பாக’ பேசத் தொடங்குகிறார். உங்கள் பிசினஸ் என்ன? குடும்பம் எப்படி? எனப் பேசிக்கொண்டே தொடர்ந்து மொபைலில் யாருக்கோ மெசேஜ் அனுப்புகிறார்.

​அடுத்த 30 நிமிடங்களில் அந்தப் பெண் செய்த காரியம் தான் ஹைலைட்! வரிசையாக 6 டீக்கீலா ஷாட்கள்.. கூடவே சைடிஷ், சிகரெட் என ஆர்டர் பறக்கிறது. 40-வது நிமிடத்தில் கஃபே மேலாளர் டேபிளுக்கு வருகிறார். கையில் இருந்த பில்லைப் பார்த்து பங்கஜுக்கு தலை சுற்றவில்லை, மாறாக சிரிப்புதான் வந்தது. பில் தொகை: ரூ. 18,616!

​”ஆட்டம் முடிந்தது” – களத்தில் குதித்த போலீஸ்

​பில் வந்தவுடன் மஹிமா ‘போன் பேசப்போகிறேன்’ என நைசாக எஸ்கேப் ஆக முயல, பங்கஜ் ஒரு ரகசிய சிக்னலை தனது மொபைலில் தட்டுகிறார். அடுத்த நொடி, சாதாரண உடையில் வெளியே காத்திருந்த இன்ஸ்பெக்டர் சுஷாந்த் தலைமையிலான 15 பேர் கொண்ட போலீஸ் படை உள்ளே நுழைகிறது.

​அங்கு நடந்த விசாரணையில் தெரிந்த உண்மைகள் அதிர்ச்சியூட்டின:

மது அல்ல தண்ணீர்: மஹிமா குடித்த அந்த 6 ஷாட் டீக்கீலாவும் வெறும் பச்சைத் தண்ணீர்! ஒரு ஷாட்டுக்கு 3,000 ரூபாய் வீதம் 18,000 பில் போட்டுள்ளனர்.

ஆண்தான் பெண்: டேட்டிங் ஆப்பில் பங்கஜுடன் பேசியது மஹிமா அல்ல; அங்கு பெண்களின் பெயரில் ஆண்களே சாட் செய்து இளைஞர்களை வலைவீசிப் பிடிக்கின்றனர்.

டெல்லி டூ மும்பை: இந்தக் கும்பலின் மாஸ்டர்மைண்ட் டெல்லியில் உட்கார்ந்து கொண்டு, 20-க்கும் மேற்பட்ட பெண்களை மும்பைக்கு வரவழைத்து இந்த மோசடியைச் செய்து வந்துள்ளனர்.

​இளைஞர்களே உஷார்

​”இது ஒரு சிஸ்டம்.. தனிமையில் இருக்கும் இளைஞர்களின் மனநிலையை வைத்து விளையாடும் ஒரு உளவியல் ஆயுதம்” என்கிறார் இந்தச் சம்பவத்தைச் அம்பலப்படுத்திய பங்கஜ். இந்த அதிரடி வேட்டையில் மொத்தம் 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

​இனி டேட்டிங் ஆப்பில் யாராவது ‘உடனே சந்திக்கலாம், நான் சொல்ற ஹோட்டலுக்கே வரலாம்’ என அடம் பிடித்தால்.. ஜாக்கிரதை! அங்கே மஹிமாக்கள் இல்லை.. உங்களை விழுங்கக் காத்திருக்கும் ஆட்கள் இருக்கலாம்!