ஆந்திர மாநிலத்தில் குடும்பத் தகராறு மற்றும் சந்தேகத்தின் காரணமாக மனைவியின் காலைத் துண்டித்த விவசாயி, அந்த வெட்டப்பட்ட காலைப் பையில் எடுத்துக் கொண்டு காவல் நிலையத்தில் சரணடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் பல்நாடு மாவட்டத்தைச் சேர்ந்த லட்சுமையா என்ற விவசாயி, காதலித்துத் திருமணம் செய்துகொண்ட தனது மனைவி பூலட்சுமியின் நடத்தையில் சந்தேகம் கொண்டு அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில், இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதில், ஆத்திரமடைந்த லட்சுமையா கோடாரியால் பூலட்சுமியின் வலது காலைத் துண்டாக வெட்டியுள்ளார்.அரங்கேறிய பகீர் காட்சி

இந்தக் கொடூரச் செயலுக்குப் பிறகு, வெட்டப்பட்ட காலை ஒரு பையில் போட்டுக் கொண்டு காவல் நிலையம் சென்ற லட்சுமையாவைக் கண்டு அங்கிருந்த போலீசார் அதிர்ச்சியில் உறைந்தனர். படுகாயமடைந்த பூலட்சுமி உடனடியாக மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக குண்டூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், லட்சுமையாவைக் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஐந்து மகள்கள் உள்ள ஒரு குடும்பத்தில் இத்தகைய கொடூரச் சம்பவம் நடந்தது அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.