மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் வெளியிட்டுள்ள புதிய உத்தரவின்படி குழாய் வழி எரிவாயு இணைப்பு பெற்றுள்ள நுகர்வோர் இனி சமையல் எரிவாயு சிலிண்டர்களைப் பயன்படுத்த முடியாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்தியாவசியப் பொருள்கள் சட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ள இந்தத் திருத்தப்பட்ட விதியின்படி ஒரே சமயத்தில் குழாய் வழி எரிவாயு இணைப்பு மற்றும் சிலிண்டர் இணைப்பு ஆகிய இரண்டையும் வைத்திருப்பது சட்டப்படி அனுமதிக்கப்படாது.
எனவே ஏற்கனவே இந்த இரண்டு வசதிகளையும் வைத்திருக்கும் நுகர்வோர் தங்களிடம் உள்ள சமையல் எரிவாயு சிலிண்டர் இணைப்பை உடனடியாக சம்பந்தப்பட்ட எண்ணெய் நிறுவனங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் குழாய் வழி எரிவாயு வசதியைப் பெற்றுள்ள வீடுகளுக்கு எண்ணெய் நிறுவனங்கள் இனி சமையல் எரிவாயு சிலிண்டர்களை விநியோகம் செய்யக்கூடாது என்றும் மத்திய அரசு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. இந்த புதிய நடைமுறையை எண்ணெய் நிறுவனங்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் முறையாகப் பின்பற்றுவதை உறுதி செய்யுமாறு அதிகாரிகள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
எரிவாயு விநியோகத்தில் நிலவும் சீரற்ற நிலையைத் தவிர்க்கவும் அனைவருக்கும் தடையற்ற எரிவாயு கிடைப்பதை உறுதி செய்யவும் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சகத்தின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
