ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள ஒரு மருத்துவமனை மீது பாகிஸ்தான் ராணுவம் திங்கள்கிழமை (மார்ச் 16, 2026) நடத்திய பயங்கர வான்வழித் தாக்குதலில், நோயாளிகள் உள்ளிட்ட 400 அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்தனர். இந்த மனிதாபிமானமற்ற செயலுக்கு இந்தியா தனது கடும் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது.

ஆப்கானிஸ்தானில் தாலிபான் அரசின் செய்தித் தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித் கூறுகையில், “தாக்குதலுக்குள்ளான மருத்துவமனை மக்கள் கூட்டத்தால் நிறைந்திருந்தது. பாகிஸ்தானின் இந்தத் தாக்குதலால் மருத்துவமனை தரைமட்டமானது. இடிபாடுகளிலிருந்து இதுவரை 400-க்கும் மேற்பட்ட உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. 250-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதால், உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும்” என்றார். இது இறையாண்மையை மீறும் செயல் என்றும் அவர் சாடினார்.

பாகிஸ்தானின் இந்தச் செயலுக்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ கண்டன அறிக்கையில் கூறியிருப்பதாவது, ஆயுதமற்ற பொதுமக்கள் மற்றும் நோயாளிகள் மீது தாக்குதல் நடத்துவது எவ்வகையிலும் ராணுவ நடவடிக்கையாகாது. புனிதமான ரமலான் மாதத்தில் இத்தகைய தாக்குதல் நடத்தப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

 மருத்துவமனைகள் போன்ற உணர்வுப்பூர்வமான இடங்களை இலக்கு வைப்பது சர்வதேச சட்டங்களை மீறுவது மட்டுமல்லாமல், ஒரு மனிதாபிமானமற்ற செயலாகும். எந்தவொரு மதமும், சட்டமும் மருத்துவமனைகள் மீது தாக்குதல் நடத்த அனுமதிப்பதில்லை. தனது நாட்டின் உள்நாட்டுத் தோல்விகளிலிருந்து உலக நாடுகளின் கவனத்தைத் திசைதிருப்பவே பாகிஸ்தான் இத்தகைய தாக்குதல்களை நடத்தி வருகிறது.

பாகிஸ்தானின் இந்த அத்துமீறலை சர்வதேச சமூகம் உன்னிப்பாகக் கவனித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தியுள்ளது. மேலும், இந்த இக்கட்டான சூழலில் ஆப்கானிஸ்தான் மக்களுக்கு இந்தியா உறுதுணையாக இருக்கும் என்றும் உறுதி அளித்துள்ளது.

இந்தக் குற்றச்சாட்டுகளை பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப்பின் செய்தித் தொடர்பாளர் மொஷரப் ஜைதி மறுத்துள்ளார். “பாகிஸ்தான் ராணுவம் எந்த மருத்துவமனையையும் இலக்கு வைக்கவில்லை; பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தப்படும் இடங்களை மட்டுமே குறிவைத்துத் தாக்குதல் நடத்தப்பட்டது” என்று அவர் விளக்கம் அளித்துள்ளார். மேலும் ஈரான் – இஸ்ரேல் போர் பதற்றம் நீடித்து வரும் வேளையில், பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் இடையே வெடித்துள்ள இந்த மோதல் ஆசியப் பிராந்தியத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.