தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த ஸ்ரீகாந்த் மற்றும் விஜயலட்சுமி தம்பதிக்கு கடந்த 2002ம் ஆண்டு திருமணம் நடைபெற்ற நிலையில் அடுத்த ஆண்டே அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டுப் பிரிந்து வாழத் தொடங்கினர். இந்நிலையில் மனைவியிடமிருந்து விவாகரத்து கோரி கடந்த 2008 ஆண்டு ஸ்ரீகாந்த் குடும்பநல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். ஆனால் தனது மகளின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு கணவருடன் இணைந்து வாழ விரும்புவதாக விஜயலட்சுமி தரப்பில் வாதிடப்பட்டது.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட குடும்பநல நீதிமன்றம் அவர்களுக்கு விவாகரத்து வழங்கி உத்தரவிட்டது. குடும்பநல நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை எதிர்த்து விஜயலட்சுமி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் தம்பதியிடையே நிலவும் ஆழமான அவநம்பிக்கை மற்றும் நீண்டகாலப் பிரிவு ஆகியவற்றைச் சுட்டிக்காட்டி அவர்கள் மீண்டும் இணைந்து வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என்று தெரிவித்தனர்.
சட்டத்தின் மூலம் அவர்களைச் சேர்த்து வைப்பது எவ்விதப் பயனும் தராது எனக் குறிப்பிட்ட நீதிமன்றம் விவாகரத்தை உறுதி செய்ததுடன் பாதிக்கப்பட்ட மனைவிக்கு ஒரே தவணையாக ஐம்பது லட்சம் ரூபாய் ஜீவனாம்சம் வழங்கவும் கணவருக்கு உத்தரவிட்டது. இதன் மூலம் சுமார் பதினேழு ஆண்டுகளாக நீடித்த சட்டப் போராட்டம் ஒரு முடிவுக்கு வந்துள்ளது.
