லண்டனில் விஜய் மல்லையாவின் பிறந்தநாள் விழாவில் பங்கேற்றபோது, தங்களையும் சேர்த்து இந்தியாவின் மிகப்பெரிய தப்பியோடியவர்கள் என லலித் மோடி வெளியிட்ட காணொளி பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தற்போது அவர் தனது செயலுக்குப் பகிரங்கமாக மன்னிப்பு கோரியுள்ளார்.

இந்தியன் பிரீமியர் லீக் அமைப்பின் முன்னாள் தலைவரான லலித் மோடி, தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருந்த அந்த வாசகங்கள் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டதாகவும், இந்திய அரசு மற்றும் நாட்டு மக்கள் யாரையாவது இது புண்படுத்தி இருந்தால் அதற்கு வருத்தம் தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்திய அரசின் மீது தமக்கு மிகுந்த மரியாதை இருப்பதாகத் தெரிவித்துள்ள அவர், வேண்டுமென்றே அத்தகைய கருத்துக்களைத் தெரிவிக்கவில்லை என்றும் விளக்கம் அளித்துள்ளார். இதற்கிடையில், இந்த விவகாரம் குறித்துக் கருத்து தெரிவித்துள்ள இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், வெளிநாடுகளுக்குத் தப்பியோடிய பொருளாதாரக் குற்றவாளிகளை மீண்டும் இந்தியாவிற்குக் கொண்டு வந்து நீதிமன்ற விசாரணையை எதிர்கொள்ளச் செய்வதில் மத்திய அரசு உறுதியாக உள்ளதாகத் தெரிவித்தார்.

இது தொடர்பாகப் பல்வேறு நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும், இதில் பல சட்டச் சிக்கல்கள் இருந்தாலும் குற்றவாளிகளைத் தாயகம் திருப்புவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் முறையாக மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார். விஜய் மல்லையா மற்றும் லலித் மோடி ஆகிய இருவருமே இந்தியாவில் பல்வேறு நிதி முறைகேடு வழக்குகளை எதிர்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.