சேலத்தில் இன்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டத்தில், பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாசுக்கு எதிராக கண்டன தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதனைத் தொடர்ந்து, தொண்டர்கள் மத்தியில் உரையாற்றிய டாக்டர் ராமதாஸ், கண்ணீர் மல்க உருக்கமாக பேசினார். அவர் பேசியதாவது:

பா.ம.க. செயற்குழுவும் பொதுக்குழுவும் நேற்று முதலே களைகட்டத் தொடங்கியுள்ளது. இன்றைய பொதுக்குழுவில் மொத்தம் 27 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. என்னிடத்தில் உள்ள ஆதங்கத்தை முழுமையாக வெளிப்படுத்த ஒரு மணி நேரம் கூட போதாது.

நான் வளர்த்த பிள்ளைகளே இன்று என்னை தூற்றிக் கொண்டு இருப்பது மிகுந்த வேதனையை அளிக்கிறது. 2026 சட்டமன்றத் தேர்தலில் யாருடன் கூட்டணி அமைப்பது என்பது குறித்து, நல்லதும் சரியானதுமான முடிவை நான் எடுப்பேன்.

வன்னியர்களுக்கு 10.5 சதவீத இடஒதுக்கீடு விரைவில் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. சமீபத்தில் கனவில் என் தாய் வந்ததை நினைத்து மனம் உடைந்து கண்ணீர் சிந்தினேன். அப்போது, ‘பிள்ளையை நான் சரியாக வளர்க்கவில்லை’ என்று கனவில் தாயிடம் அழுததாக தெரிவித்தார். இதைக் கேட்ட தொண்டர்கள், “அழக்கூடாது ஐயா” என உருக்கமாக கூறினர்.

என்னை 20 அல்லது 30 துண்டுகளாக வெட்டி வீசியிருந்தாலும், அதற்கும் நான் தயாராக இருந்திருப்பேன். சில சில்லறை நபர்களை வைத்துக் கொண்டு தினமும் என்னை மனதளவில் காயப்படுத்துகிறார்கள்.

பாட்டாளி மக்கள் கட்சியில் 100-க்கு 95 சதவீத தொண்டர்கள் இன்னமும் என் பக்கமே உள்ளனர். அன்புமணி, என்னை நெஞ்சிலும் முதுகிலும் ஈட்டியால் குத்தியதைப் போல நடந்துகொண்டார் என்று வேதனையுடன் தெரிவித்தார்.

இவ்வாறு டாக்டர் ராமதாஸ் உரையாற்றினார்.