சேலத்தில் இன்று டாக்டர் ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற பா.ம.க. பொதுக்குழுவில், கட்சித் தலைவர் அன்புமணி ராமதாசுக்கு எதிராக கண்டன மற்றும் விமர்சன தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதற்கு, அன்புமணி தரப்பு கடும் எதிர்வினை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அன்புமணி ராமதாசின் தரப்பில் வழக்கறிஞர் பாலு செய்தியாளர்களிடம் கூறியதாவது:
சேலத்தில் இன்று நடைபெற்ற பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட எந்த முடிவும் எங்களை எந்த வகையிலும் கட்டுப்படுத்தாது. அங்கு இரண்டு கேலி கூத்தான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
முதலாவதாக, பா.ம.க. தலைவராக டாக்டர் ராமதாசை தேர்வு செய்ததாக தீர்மானம் நிறைவேற்றியுள்ளதாக கூறியுள்ளனர். அப்படியானால், இதுவரை அவர்கள் கூறி வந்தவை அனைத்தும் பொய்யா? டாக்டர் ராமதாசை ஏற்கனவே பொதுக்குழுவில் முறையாகத் தேர்வு செய்து, அதனை தேர்தல் ஆணையத்திற்கும் தெரிவித்து, உயர்நீதிமன்றமும் அங்கீகரித்துவிட்டதாக அவர்கள் தொடர்ந்து கூறி வந்தனர். அப்படி இருந்தால், இப்போது புதிதாக தலைவரை தேர்வு செய்ததாக கூறுவது ஏன்?
ஒரு அரசியல் கட்சியின் புதிய தலைவரைத் தேர்வு செய்ய, அந்தக் கட்சியின் தற்போதைய தலைவர்தான் பொதுக்குழுவை கூட்ட முடியும். அந்த அடிப்படையில், தற்போது பா.ம.க. தலைவராக இருக்கும் அன்புமணி ராமதாஸ்தான் பொதுக்குழுவை கூட்டி, புதிய தலைவரை தேர்வு செய்யும் அதிகாரம் பெற்றவர்.
இரண்டாவது கேலி கூத்தான தீர்மானமாக, பசுமைத் தாயகம் அமைப்பின் தலைவர் பதவியில் இருந்து சவுமியா அன்புமணியை நீக்கியதாக அவர்கள் கூறியுள்ளனர். சவுமியா அன்புமணி, ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரிக்கப்பட்ட பசுமைத் தாயகம் அமைப்பின் தலைவராக நீண்ட காலமாக உள்ளார். அவரை நீக்க வேண்டுமென்றால், அந்த அமைப்பின் பொதுக்குழுவே கூடி முடிவெடுக்க வேண்டும். வேறு எந்த அமைப்புக்கும் அந்த உரிமை கிடையாது.
மேலும், காந்திமதி எங்கள் தலைவரை மிக மோசமாகவும் தரக்குறைவாகவும் விமர்சித்துள்ளார். இதனை கடுமையாக கண்டிக்கிறோம். அன்புமணி ராமதாஸ் பா.ம.க.வை வழிநடத்தி வரும் தலைவர். அவரை யார் விமர்சித்தாலும் அதை ஏற்றுக்கொள்ள மாட்டோம். அது அக்காவாக இருந்தாலும் சரி. அக்கா–தம்பி பிரச்சினை இருந்தால், அது வீட்டுக்குள் பேசப்பட வேண்டும்.
பா.ம.க. டாக்டர் ராமதாசின் குடும்ப சொத்து அல்ல. இந்த விமர்சனங்களை காந்திமதி இன்றோடு நிறுத்திக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால், பல விஷயங்களை நாங்களும் வெளியே சொல்ல வேண்டிய சூழல் உருவாகும் என எச்சரிக்கை விடுக்கிறோம்.
இவ்வாறு வழக்கறிஞர் பாலு தெரிவத்தார்.
